Wednesday, November 12, 2014

Ration

ரேஷன் அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டுகள் !
தமிழகத்தில் ரேஷன் அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் அட்டைகளை வழங்க தமிழக அரசு முன்வந்துள்ளது. இதற்கான அறிவிப்பை ஏற்கனவே அரசு வெளியிட்டுள்ளது.
‘‘பயோமெட்ரிக்’’ அடையாளம் என்று அழைக்கப்படும் விரல் ரேகை, கருவிழி பதிவு ஆகியவற்றுடன் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படவுள்ளன.தற்போது டிசம்பர் 31–ந் தேதியுடன் ரேஷன் அட்டைகளின் காலம் முடிவடைகிறது. எனவே அவற்றில் உள்தாள் ஒட்டப்பட்டு, குறிப்பிட்ட காலம் வரை அதன் ஆயுள் அளவு நீட்டிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசின் ஆதார் அட்டைகள் வழங்கும் பணி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. தேசிய மக்கள் தொகை பதிவின் (என்.பி.ஆர்.) அடிப்படையில் ஆதார் அட்டைகள் வழங்கப்படுகின்றன.தற்போது தமிழகத்தில் மக்கள் தொகையின் எண்ணிக்கை 7 கோடிக்கும் மேலாக உள்ளது. இங்கு 4.91 கோடி பேர் (73 சதவீதம்) பேர் என்.பி.ஆர். பதிவில் உள்ளனர். இவர்களில் 4.65 கோடி பேருக்கு ஆதார் எண்கள் அல்லது ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுவிட்டன.

ஆதார் அடிப்படையில் ஸ்மார்ட் அட்டைகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் தமிழகத்தில் முழுமையாக என்.பி.ஆர். பதிவு நடைபெறவில்லை. எனவே விடுபட்டுப்போனவர்களையும், புதிதாக பிறந்தவர்களையும் சேர்ப்பதற்காக இம்மாதம் 15–ந் தேதியில் இருந்து தாலுகா அளவில் முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

இதன் மூலம் அனைத்து மக்களையும் என்.பி.ஆர். பதிவில் சேர்ப்பதற்கு முழு முயற்சி எடுக்கப்படுகிறது. அதன் பின்னர் என்.பி.ஆரின் அடிப்படையில் விடுபட்டுப்போனவர்களுக்கு ஆதார் எண்களை மக்களுக்கு மத்திய அரசு வழங்கும்.தற்போது அதிக அளவில் அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அங்கு 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆதார் எண்கள் வழங்கப்பட்டுவிட்டதால், ஸ்மார்ட் அட்டைகளை தயாரிக்கும் பணியை தொடங்க, அந்த இரண்டு மாவட்டங்களையும் தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.

இந்த மாவட்டங்களில் விடுபட்டுப்போனவர்களுக்கு முகாம்கள் மூலம் ஆதார் எண்கள் வழங்கப்பட்ட பிறகு, ஸ்மார்ட் அட்டைகளை தயாரிக்கும் பணியை தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.விரல் ரேகை, கருவிழி போன்ற பயோ மெட்ரிக் பதிவுகளோடு, ரேஷன் அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் அட்டைகள் தயாரிக்கப்படுவதால், 100 சதவீத போலி ரேஷன் அட்டைகளை ஒழிக்க முடியும்.

No comments: