Thursday, December 28, 2023

பட்டதாரி ஆசிரியர்கள்

 மாநில முன்னுரிமை அரசாணை 243, தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகளும், அரசாணையின் நிறைகளும்.

* அரசாணை எண் 12 ல் Head master / Headmistress of middle Schools - By Promotion from class II and Category 1 of Class III of the Service in Combined Seniority என்ற விதி ரத்து செய்யப்படுகிறது . நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் Uதவி உயர்வு  பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொகுப்பு முன்னுரிமை Uட்டியல் படி வழங்கப்படுவது ரத்து செய்யப்படுகிறது .

* By the Promotion from the Categories in Class Il என்ற புதிய அமெண்ட்மென்ட் படி

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் .

* பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு  தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்  மற்றும் இடைநிலை ஆசிரியகளுக்கு வழங்கப்படும் விதி ரத்து செய்யப்படுகிறது . By Promotion from the eligible Persons in Category 1 of Class III என்ற விதியின் படி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மட்டுமே பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியும் .இடைநிலை ஆசிரியர் நேரடியாக பட்டதாரி ஆசிரியராக இனி பதவி உயர்வு பெற முடியாது .

* For the Purpose of appointment Category 1 of Class 1 State Shall be a unit என்ற விதியின் படி வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வு மட்டுமே மாநில சீனியாரிட்டி முறையில் நியமனம் , மாறுதல் நடைபெற்றது .

For the Purpose of appointment to any of the Categories in the Service the state Shall be Unit என்ற புதிய அமெண்ட்மன்ட் படி  மாநில முன்னுரிமை படியே அனைத்து பதவி உயர்வுகளும் ,மாறுதலும் நடைபெறும் . புதிய விதியின் படி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேறு ஒன்றியத்திற்கு , வேறு மாவட்டத்திற்கு பதவி உயர்வு பெற முடியும் 

* புதிய அரசாணையில் நீதிமன்ற தீர்ப்புகளின் படி மாநில சீனியாரிட்டி வழங்கப்பட காரணம் என்று கூறப்பட்டுள்ளது .

*நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பாக பட்டதாரி ஆசிரியர்களை நீண்ட காலம் புறக்கணித்ததின் விளைவு புதிய விதி ..

Sunday, December 3, 2023

மழை

 


ஒளிந்தால்

தேடுகிறான்...


விழுந்தால்

ரசிக்கிறான்...


எழுந்தால்

ஓடுகிறான்...


ஓடினால்

ஒளிகிறான்...


மனிதனோடு

கண்ணாமூச்சு

விளையாடுகிறது...


*"மழை"*

Tuesday, November 21, 2023

தோட்டம்

 


தோட்டம்

என்பது...


அழகிய

மலர்களால்

நிறைந்தது

மட்டுமல்ல,


காய்ந்த

சருகுகளும்

சேர்ந்ததுதான்.



Tuesday, November 14, 2023

மழை விடுமுறை இல்லை




 🌧️ *கனமழை காரணமாக இன்று (15.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :*

*திருவள்ளூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

*சென்னை* (பள்ளிகள்) 

*புதுச்சேரி/காரைக்கால்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

🌧️ *விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :*

☹️ *காஞ்சிபுரம்*

☹️ *விழுப்புரம்*

Saturday, November 11, 2023

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 

இனிய...
தீபாவளி நல்வாழ்த்துகள்.

மனதில்
மகிழ்ச்சி மத்தாப்பு
பூத்துக் குலுங்கட்டும்! 

இல்லத்தில்
சிரிப்புச் சரவெடி
சிதறி கிடக்கட்டும்!

பூவாணமாய்
நல்லெண்ணங்கள்
மேலோங்கி மின்னட்டும்!

சங்குச்சக்கரங்களாய்
வாழ்க்கைச் சக்கரம்
ஒளிவீசி சுழலட்டும்!

இயற்கை அன்னைக்கும்,
உயிரினங்கள் எவற்றிற்கும்
இடையூறு செய்யாமல்...

அதிரடி
வெடியில்லாமல்...

கந்தகப் புகை
எழுப்பாமல்...

தெருவை
குப்பை மேடாக்காமல்...

இயற்கையைப்
பேணும் வண்ணம்...

இனிதே கொண்டாட
இதயபூர்வ வாழ்த்துகள்.

வாழ்த்துகளுடன்…..


Saturday, September 23, 2023

ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு வழக்குகள்.

 ஆ. மிகாவேல்    ஆசிரியர் , மணப்பாறை 

     ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களுக்கு 1000 க்கும் மேல் மனு எழுதி கொடுத்துள்ளேன்.

என்னை அணுகி நான் வழக்கு தொடர உதவிய வழக்குகள் 500 ஐ தொடும் .பதவி உயர்வு வழக்கு மேல் முறையீடு செய்ய வேண்டாம் என கூறிய வழக்குகள் 50 ஐ தாண்டும் .Audit வழக்குகளில் , தேர்வு நிலை வழக்குகள் , இளையோர் மூத்தோர் ஊதிய நிர்ணய வழக்குகள் ,ஒழுங்கு நடவடிக்கை வழக்குகள், பணி வரன்முறை வழக்குகள் பங்களிப்பு செய்து வருகிறேன் . பழைய ஓய்வூதிய திட்டம் நீதி மன்ற தீர்ப்பின் மூலம் 20 பேருக்கு பெற்றுக் கொடுத்துள்ளேன் .

01.06.2009க்கு பிறகு பணியில் சேர்ந்த 30 பேருக்கு Fitment 1.86 நீதிமன்றம் மூலம் பெற்றுக் கொடுத்துள்ளேன் . அரசின் நிதி உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு அரசின் நிதி உதவி பெறும் பள்ளியில் பெற்ற ஊதியத்தை அரசுப் பள்ளியில் பெற்றுக் கொடுத்துள்ளேன்

* வழக்குகளில் இரண்டு வாய்ப்புகள் தான் . வழக்கில் வெற்றி பெறுவது , வெற்றிகாக சரியான முறையில் போராடினோம் என்பது .

* ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பதவி உயர்வு என்று வெவ்வேறு வழக்குகளில் இதுவரை 10 நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர் .

* சீராய்வு Review பயன் தராது என்று பதிவு செய்துள்ளேன் . வழக்கு உச்ச நீதிமன்றம் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில் Review பற்றி விரிவாக பதிவு தவிர்க்கிறேன் 

* ஒரு குறிப்பிட்ட சங்கம் உச்ச நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது சரி . வழக்கு சார்ந்த எனக்கு உள்ள நீண்ட அனுபவத்தின் அடிப்படையில் கூறுகின்றேன் . 

* உயர் நீதிமன்ற தீர்ப்பில் மாநில  அரசின் உரிமை தொடர்பாக விரிவாக ஆராய பட்டுள்ளது .எனவே இந்த வழக்கில் அரசியல் சாசன வழக்கில் அனுபவமுள்ள உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வாதம் அவசியமாகிறது 

.மற்ற சங்கங்கள் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரை அமர்த்துவது அவசியமாகும் .

* முதுகலை ஆசிரியர் , உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கின் தீர்ப்பு அடிப்படையில் PG பணியாற்றி பதவி உயர்வு பெற்றோரை பணி இறக்கம் செய்ய வாய்ப்பு உள்ளது . தற்போது இவர்கள் மூத்த வழக்கறிஞர் மூலம் உயர் நீதிமன்ற  Review செய்துள்ளனர் . வழக்கு தள்ளுபடி செய்ய அதிக வாய்ப்பு உண்டு ஆனால் உச்ச நீதிமன்றம் இவர்களின் கோரிக்கையை ஏற்க வாய்ப்பு உண்டு .

* வழக்கை சரியான திசையில் நடத்தவில்லையெனில் தகுதித் தேர்வின்றி பதவி உயர்வு பெற்ற றோருக்கும் மேற்கண்ட பத்தியில் சுட்டிக்காட்டிய பிரச்சனை எழ வாய்ப்பு உண்டு .ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த வாரம் ஒரு தீர்ப்பில் பாதுகாப்பு செய்துள்ளது .உயர் நீதிமன்ற , உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் முன்பே Uதவி உயர்வில் சென்றோரை பணி இறக்கம் செய்ய கூடாது .

* ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தீர்ப்பு வந்தவுடன் எனது பதிவை பார்த்து , யூ டியூப் தளம் ஒன்று என்னை பேட்டி எடுக்க கேட்டனர் . விடுமுறை நாளில் தொடர்பு கொள்கின்றேன் என்று கூறி தொடர்பு கொள்ளவில்லை .இதை குறிப்பிட காரணம் பரபரப்பு காக பதிவு செய்வது எனது நோக்கம் அல்ல .

* வழக்கில் உள்ளதை உள்ளபடி பேசினால் தான் வெற்றி பெற முடியும் . பொய்யான நம்பிக்கை வெற்றி தராது .

* இந்த வழக்கோடு தொடர்புடைய 42 ஆசிரியர்களுக்கு வழக்கில் வெற்றி பெற எழுதி கொடுத்துள்ளேன் .மூத்த வழக்கறிஞரிடம் கொடுத்துள்ளனர் .

* அரசாணைகளை நீதிமன்ற தீர்ப்பின் வழியாக எப்படி புரிந்து கொள்வது , துறையால் வழங்க முடியாதவற்றை , வழங்க மறுப்பவற்றை நீதிமன்றம் மூலம் பெற்று தருவது என்ற காலமும் இயற்கையும் காட்டிய பாதையில் தொடர்ந்து பயணிப்பேன் .

ஆ. மிகாவேல்

ஆசிரியர் ,

மணப்பாறை

9047191706

DA TN Govt



ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா - பணி

 ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) 


அப்ரெண்டிஸ் விண்ணப்ப சாளரம் 

இன்று செப்டம்பர் 21, 2023 அன்று இரவு 11:59 மணிக்கு முடிவடைகிறது. இந்த ஆட்சேர்ப்பு இயக்கம் 20-28 வயதுடைய விண்ணப்பதாரர்களுக்கு 6160 பதவிகளை வழங்குகிறது. வெற்றிபெறும் விண்ணப்பதாரர்கள் மாதந்தோறும் ரூ. 15,000 உதவித்தொகையுடன் ஒரு வருட பயிற்சித் திட்டத்தில் ஈடுபடுவார்கள். தேர்வு செயல்முறை ஆன்லைன் எழுத்துத் தேர்வையும் உள்ளடக்கியது, மேலும் தேர்வு அக்டோபர்/நவம்பரில் திட்டமிடப்பட்டுள்ளது. விலக்கு பெற்ற SC/ST/PwBD வேட்பாளர்களைத் தவிர, விண்ணப்பதாரர்கள் ரூ.300 விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

எஸ்பிஐ அப்ரண்டிஸ் 2023: 6160 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 

www.sbi.co.in

நேரடி இணைப்பு

எஸ்பிஐ அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்பு 2023: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) இன்று, செப்டம்பர் 21, 2023, இரவு 11:59 மணிக்கு அப்ரண்டிஸ் பதவிக்கான பதிவு சாளரத்தை மூடும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் sbi.co.in இல் உள்ள அதிகாரப்பூர்வ SBI ஆட்சேர்ப்பு போர்டல் மூலம் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.


Monday, September 18, 2023

யானை முகம் வந்த கதை

 


யானை முகத்தோர் ஐந்து கரத்தோர் விக்னேஸ்வரர் மூஷிக வானர் என்று பல பெயர்களால் வழிப்படும் விநாயகர்  ஹிந்துக்களின் முழு
 முதல் கடவுள்.

வினை தீர்க்கும் விநாயகர் எப்படி பிறந்தார் அவருக்கு மனிதர்களில் முகம் இல்லாமல் ஏன் யானை முகம் உள்ளது என்று புராணக்கதை மூலம் அறியலாம்.

விநாயக சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. தேவர்களுக்கு இடையூறு செய்த அரக்கர்களை ஒடுக்க பரமசிவன் பார்வதியால் விநாயகர் யானை முகத்தோடு மனித உடலோடு படைக்கப்பட்டார் அரக்கன் கஜமுக அசுரனை அழித்து தேவர்களை மீட்டார்.

கைலாயத்தில் ஒரு நாள் பார்வதி தேவி நீராடுவதற்காக செல்லும் பொழுது நிகழ்ந்த உரையாடலை காண்போம்.

பார்வதி தேவி நீராடும் சமயம் சிவபெருமான் பார்வதி தேவியை காண வருகிறார், சிவனைக் கண்ட பார்வதி சினம் கொண்டார்.

மறுநாள் பார்வதி தேவி தன் மீது உள்ள சந்தனத்தால் அழகிய உருவம் செய்து அதற்கு உயிர் கொடுத்தார். மீண்டும் சிவபெருமான் வந்தார் அங்கு நிற்கும் பாலகன் யாராக இருப்பான் என்று எண்ணியவாறு உள்ளே செல்ல முயன்றார்.

கோபம் அடைந்த சிவன் அங்குள்ள காவலர்களை அழைத்து பாலகனை அங்கிருந்து அகற்றுங்கள் என்று கூறி சென்று விட்டார். தோல்வியுற்ற வீரர்கள் சிவனிடம் முறையிட்டனர் இதை அறிந்த சிவபெருமான் விநாயகரை அங்கிருந்த சூலாயத்தால் அவர் தலையை கொய்தார்.

விநாயகரின் சத்தம் கேட்டு அங்கு வந்த பார்வதி பிள்ளையாருக்கு தலை இல்லாததை பார்த்து கோபமடைந்தார் தான் செய்த பிள்ளையாரை சிவனே சிதைத்ததை அறிந்து அவர் காளியாக மாறி உருவம் எடுத்து வெளியேறி அவரது கண்களில் பட்ட சகலத்தையும் அழிக்க தொடங்கினார்.

அங்கிருந்த தேவர்கள் அனைவரும் சிவனிடம் முறையிட்டனர், அதாவது பார்வதி தேவி காளியாக உருவம் கொண்டு ஆக்ரோஷத்துடன் இருக்கிறார் என்றனர், சிவன் சமாதானம் செய்ய முடிவெடுத்தார்.

சிவபெருமான் பிற தேவர்களை அழைத்து வடதிசையில் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவ ராசியில் தலையை வெட்டி எடுத்து வர ஆணையிட்டார், கூறியவாறு வட திசையில் முதலில் தென்பட்ட யானையை கொண்டு வந்தனர்.

யானையின் தலையை வெட்டி எடுத்து சிவனிடம் கொடுத்தனர் யானையின் தலையை வெட்டி எடுத்து தலையை வெட்டப்பட்டு கிடந்த பிள்ளையாரின் முகத்தில் வைத்து உயிர் கொடுத்தார் சிவபெருமான்.

பார்வதிதேவி சமாதானம் கொண்டு விநாயகரை கட்டி அணைத்தார், அதன் பிறகு சிவபெருமான் விநாயகருக்கு கணேசன் என்று பெயர் சூட்டினார், மற்றும் சிவபெருமான் கணேசனை தேவனுக்கு தலைவராக நியமித்தார் என்று நாரத புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜமுக சூரனை அழிக்க விநாயகர் படைத்துள்ளனர் அதோடு முழு முதல் கடவுளாக விளங்குவார் எங்கு பூஜை செய்தாலும் முதல் பூஜை கணபதிக்கு தான் என்று வரம் கொடுத்தார்.

Monday, September 11, 2023

இல்லம் தேடி கல்வி




அடுப்படி பட்டதாரி

மாலை நேரம், முல்லை வயல் வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பினாள். வயல் காட்டில் இருந்த விறகுகளை சேகரித்து அதை தன் தலையில் சுமந்து கொண்டு வந்தாள். 

வரும் வழியில் ஒரு வீட்டில் குழந்தைகள் ஆடிப்பாடி விளையாடிக் கொண்டிருந்தார். அதை கண்ட முல்லை, என்ன இங்கு கடந்த வாரம் வரை இந்த குழந்தைகள் கூட்டம் இங்கு இல்லை,ஆனால் சில நாட்களாக ஆங்காங்கே குழந்தைகள் கூடி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், என்று யோசனை செய்தபடிநடந்து சென்றாள். 

அங்கு அவள் வீட்டுக்கு அருகில் ஒரு மரத்தடியில் குழந்தைகள் கூட்டமாய் இருந்ததை கண்டாள். அதில் தனது மகள் பூவிழியும்,இருந்ததை பார்த்த அவள் பூவிழி இங்கு என்ன செய்கிறாய், எனக் கேட்டவாறு பூவிழியை நோக்கி நகர்ந்தாள்.

அங்கு ஒரு பெண், தனது கையில் வண்ண, வண்ண புகைப்படங்கள் வைத்துக் கொண்டு மாணவர்களுக்கு கதை ஒன்றை சொல்லிக் கொடுத்தாள். அங்கு சென்ற முல்லை அந்த பெண்ணிடம், நீங்கள் யார் இங்கு என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டாள். 

அதற்கு அந்த பெண் இது இல்லம் தேடிக் கல்வி திட்டம். இந்த திட்டம் த‌மிழக‌ முதல்வர் அவர்களால் உருவாக்கப்பட்டு,பல உயர் அதிகாரிகள் மற்றும் என்னை போன்ற தன்னார்வலர்களாலும்,செயல் பட்டு வருகிறது. 

இங்கு மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை, ஆடல், பாடல், கதைகள் மூலமாக நாங்கள் சரி செய்து வருகிறோம்.அதுவே எனது பணி. இன்று முதல் இங்கேயும் ஒரு மையம் செயல் படத் தொடங்கியுள்ளது. அதனால் தான் உங்கள் மகளும் இங்கே வந்துள்ளாள்,என அந்த பெண் கூறினாள். 

பின்னர் அந்த பெண்ணின் அனுமதியுடன் சற்று நேரம் அங்கேயே அமர்ந்து குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதை கண்டு, தானும் ஒரு குழந்தையை போல் மெய் மறந்து போனாள்.திடீரென அருகில் உள்ள கோவிலில் மாலை மணி 6 என ஓசை ஒலித்தது. 

துடித்து  எழுந்த முல்லை, நேரம் போனதே தெரியவில்லை, மணி ஆகிவிட்டது. நான் முன்னர் செல்கிறேன், பூவிழி  நீ வகுப்பை முடித்து விட்டு வா என்று கூறியவாறு  விறகை சுமந்து கொண்டு தன் வீட்டில் கொண்டு போய் இறக்கி வைத்தாள். அங்கே இறக்கி வைக்கப்பட்டது விறகு சுமை மட்டுமல்ல, தன்னைப் போல்  தனது குழந்தையின் கல்வியும் எண்ணாகுமோ என்று நினைத்த மனச் சுமையும் தான்.....

கை, கால்களை கழுவிக் கொண்டு, இரவு உணவாக என்ன சமைப்பது என்று நினைத்தபடி சமையலறையில்  நுழைந்தாள், அங்கு அவளும் ஒரு பட்டதாரி தான். 
அவள் வீட்டு அடுப்படியில்......

Sunday, August 20, 2023

திரௌபதி யார். மகாபாரத சந்தேகம்


மகாபாரத பாத்திரங்களின் பிறப்புகளை மட்டும் இங்கே பார்ப்போம். கிருஷ்ணன் தவிர முக்கிய பாத்திரங்கள் யாரும் கணவனுக்கும் மனைவிக்கும் பிரசவித்தவர்களாக இல்லை. ஆரம்பத்தில் இருந்தே போவோம் வாருங்கள்.

சத்தியவதி - உபரிசரன் என்ற மன்னனுக்கும் அந்த மன்னனின் விந்தணுவை உண்ட மீனுக்கும் பிறந்தவர்.

வேதவியாசர் - சத்தியவதிக்கும் கணவன் அல்லாத பராச முனிவருக்கும் பிறந்தவர்.

பீஷ்மர் - சாந்தனு மன்னனுக்கும் கங்கை நதிக்கும் பிறந்தவர்.

திருதராஷ்டினன் - வேத வியாசருக்கும் விசித்திரவீரியனின் மனைவியான அம்பிகாவிற்கும் பிறந்தவர்.

பாண்டு - வேத வியாசருக்கும் விசித்திரவீரியனின் மனைவியான அம்பாலிகாவிற்கும் பிறந்தவர்.

விதுரன் - வேதவியாசருக்கும் விசித்திரவீரியனின் மனைவியரின் 

பணிப்பெண்ணிற்கும் பிறந்தவர்.

கௌரவர்கள் - நூறு பானைகளில் கருக்கட்டப்பட்டவர்கள்.

கர்ணன் - சூரியன் என்ற நட்சத்திரத்திற்கும் குந்தி என்ற பெண்ணிற்கும் பிறந்தவர்.

தர்மன் - எம தர்மனுக்கும் பாண்டுவின் மனைவி குந்திக்கும் பிறந்தவர்.

வீமன் - வாயு பகவானான காற்றிற்கும் பாண்டுவின் மனைவியான குந்திக்கும் பிறந்தவர்.

அர்ஜினன் - சுவர்க்கத்தின் அதிபதி இந்திரனுக்கும் பாண்டுவின் மனைவியான குந்திக்கும் பிறந்தவர்.

நகுலன் & சகாதேவன் - அசுவினி குமாரர்களிற்கும் பாண்டுவின் மனைவியான மாதுரிக்கும் பிறந்தவர்கள்.

திரௌபதி & திருஷ்டத்துய்மன் - யாக குண்டத்தின் நெருப்பில் இருந்து உருவானவர்கள்.

துரோணர் -  பரத்வாச முனிவர் அவரது விந்தை கலச குண்டத்தில் விட்டபோது பிறந்தவர்.


Saturday, August 19, 2023

திடம்

 நாம்

சந்திக்கும்...

ஏழ்மையும்,

ஏளனமும்...

நம்மைத்

திடப்படுத்துகின்றன.

Friday, August 11, 2023

ஏமாற்றம்

ஏமாற்றுதலையும்,
நயவஞ்சகத்தையும்
"சாதுர்யம்"
என்கிறார்கள்,

நேர்மையையும்,
நியாயத்தையும்
"ஏமாளித்தனம்"
என்கிறார்கள்.

Thursday, July 27, 2023

அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி

வரும் 2022 ஆகஸ்டு 13 முதல் வரை தமிழகத்திலுள்ள " அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி " ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்தவும் , 75 வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை சிறப்பிக்கவும் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் இதனை தெரிவித்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள , அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Sunday, May 7, 2023

உன்னால் முடியும்

 இன்று பிளஸ் டூ ரிசல்ட் வருகிறது. 


முன்பொரு காலம் இருந்தது . உலகின் அனைத்து ஊடகங்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்தவர்களைக் கொண்டாடி தீர்த்த காலம் அது . இல்லாவிட்டால் நூலிழையில் முதல் மதிப்பெண்ணை தவற விட்டவர்கள் பின்னால் போய் இப்போது உங்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என ஓயாமல் கேட்டுக் கொண்டிருந்த காலம் அது. 

தமிழ் பாடத்தை எடுத்து மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்றவர் ..... பிரெஞ்சு படித்து முதல் மதிப்பெண் பெற்றவர்.... சமஸ்கிருதம் படித்து முதலில் வந்தவர் .....என ஆளாளுக்கு கூவிக் கொண்டிருந்த  காலம்.

தமிழ்ப் பாடத்தைப் படித்தவர் மட்டுமே மாநிலத்தின் முதல் மதிப்பெண் பெற்றவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதெல்லாம் காற்றில் பறந்த காலம் அது.  ஒவ்வொரு ஊடகமும் உள்ளூர் சேனலும் போட்டி போட்டுக்கொண்டு சொல்வதைக் கண்டு குழம்பிப் போனவர்கள்தான் அநேகம் பேர்.

ஏதேதோ காரணங்களால் வெற்றிக்கான பாதையை விட்டு விலகியவரைப் பற்றிய குறிப்புகள் எங்குமே இருக்காது. தோல்வியின் துயர் தாங்காது கல்வியின் பாதையில் இருந்து விலகிப் போனவர்கள்தான் அநேகம் பேர்.

இன்று மொத்தமும் மாறியிருக்கிறது..அவரவர் மதிப்பெண்ணை அவரவர் அறிந்தால் மட்டுமே  போதுமானது, பள்ளி அளவில் கூட முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களை அறிவிக்கக் கூடாது என அறிவிப்பு இருக்கிறது.

இந்த வருடம் மே எட்டாம்  தேதியிலிருந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் அனைத்து முதுகலை ஆசிரியர்களும் பள்ளியில் இருப்பார்கள். அனைத்து மாணவர்களையும் பள்ளிக்கு வரவழைத்து  உயர் கல்வி வழிகாட்டி குழு அமைக்கப்பட்டு மேற்படிப்பு குறித்த அனைத்து தகவல்களையும் மாணவர்களிடம் பகிர்வார்கள். ஒவ்வொரு மாணவரும் படிக்க விரும்பும் பாடம்..கல்லூரி..நல்ல கல்லூரிகள் பற்றிய தகவல்கள் , கல்வி லோன் எடுக்கும் முறைகள், நிதி உதவி செய்யும் ஃபவுண்டேஷன் பற்றிய தகவல்கள் அனைத்தையும் மாணவர்களுக்கு தருவார்கள்.

தேர்வில் தோல்வியடைந்த  மாணவர்களுக்கு கவுன்சிலிங் தந்து பெற்றோர்களை அழைத்து பேசி அடுத்த தேர்வுக்கு ஆயத்தப் படுத்த வேண்டும்..  என அரசு அறிவுறுத்தியுள்ளது.  இவை அனைத்தையும் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு மிகுந்த அக்கறையுடனும்  பொறுப்புணர்வோடும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

அனைத்து மாணவர்களும் உயர்கல்வி படிப்பைத் தொடர வேண்டும் என்பதில் அரசு தீவிர முனைப்பு காட்டுகிறது. ஆசிரியர்கள் பள்ளிகளில் உதவத் தயாராக உள்ளனர்.

எனவே அனைத்து பெற்றோரும் நண்பர்களும் கல்வியாளர்களும்   தங்களால் இயன்ற உதவியை தேவைப்படும் குழந்தைகளுக்குத் தந்து " நான் முதல்வன்" திட்டம் மூலம் பயன்பெறுமாறு  அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நான் முதல்வன்

 +2 மாணவர்களே     நான் முதல்வன் திட்டத்தை பயன்படுத்துங்கள்.... 

இன்று (மே8) பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றிபெற வாழ்த்துக்கள்! 

+2 தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தவர்களுக்குப் பிரச்னையில்லை. 

மருத்துவம், பொறியியல் என அவர்களுக்கான தேடல் விரிகிறது. 

குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள்.. கவலைப்பட வேண்டாம்..

அதற்காக மனம் உடையத் தேவையில்லை. ஏகப்பட்ட வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. சொல்லப் போனால், பொறியியல், மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்குக் கிடைக்காத பெரிய பெரிய வாய்ப்புகள் எல்லாம் இவர்களுக்காகக் காத்திருக்கின்றன.

மதிப்பெண் என்பது ஒரு தகுதி. ஒரே தகுதியல்ல.வாழ்க்கையில்  நல்ல மதிப்பெண் பெறுபவரே புத்திசாலி, பெற முடியாதவர் புத்திசாலி அல்ல என்ற கற்பிதமே தவறானது. மதிப்பெண்ணுக்கும் அறிவுக்கும் பெரிய தொடர்பில்லை. சூழ்

நிலையும், பொருளாதாரப் பின்னணியும்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருக்கிறது. மதிப்பெண் குறைந்ததற்காக வருந்தவும், குழப்பம் அடையவும் அவசியமில்லை. 

முதலில் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். மருத்துவமும் பொறியியலும் மட்டுமே படிப்பல்ல. 250க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய துறைகள் உண்டு. 

ஏராளமான மருத்துவம் சார்ந்த படிப்புகள் ( பிசியோதெரபி, நர்சிங், லேப் டெக்னிஷியன், பார்மசிஸ்ட்  )  மற்றும் மீன்வளத்துறை வேளாண்மை துறை தோட்டக்கலை துறை உடற்கல்வி துறை கால்நடை மருத்துவ துறை கடல்சார் துறை சட்டத் துறை இசைத் துறை ஓவியத் துறை சிற்பத் துறை மீடியா துறை ராணுவ துறை என பல்வேறு துறைகளில் உயர் கல்வி வாய்ப்புகள் உள்ளன. மேலும் கலை அறிவியல் சார்ந்த படிப்புகளும் ஏராளம். 

மதிப்பெண் கிடக்கட்டும். கவலையை விடுங்கள். இந்த உலகம் எல்லோருக்குமானது. நீங்கள் சாதிக்க இந்த உலகத்தில் பரந்த வெளிகள் உண்டு. சரியானதைத் தேர்வு செய்யுங்கள். அதில் முழுக்கவனத்தையும் செலுத்தி படியுங்கள். நிச்சயம் சிகரம் தொடுவீர்கள்!

அதேபோல் தேர்வில் வெற்றி பெற தவறிய மாணவர்களும் கவலை பட தேவையில்லை.சோர்ந்து போய் மூலையில் முடங்கி விட வேண்டாம். விரைவில் நடக்க உள்ள உடனடி தேர்வுகளில் ( இன்ஸ்டன்ட் எக்ஸாம்) கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று இந்த கல்வியாண்டினை  வீணாக்காமல்  பொறியியல் கல்லூரிகளில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து விட முடியும்.

மேலும் நமது தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறை இணைந்து நாட்டுநலப்பணித்திட்டத்துடன் கரம் கோர்த்து நான் முதல்வன் என்கிற திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி களிலும் (  3123  பள்ளிகளில்) உயர்கல்வி வழிகாட்டி மையத்தினை  ( CAREER GUIDANCE CELL)  ஏற்படுத்தி உள்ளது. 

நான் முதல்வன் திட்டம் அடுத்து என்ன படிப்பது என்று திசை தெரியாமல் திகைக்கும் மாணவர்களுக்கு ஒரு திசைகாட்டி ,கலங்கரை விளக்கம். ஏழை எளிய மாணவர்களுக்கு ஓர் வரப்பிரசாதம். 

இந்த குழுவில் தலைமை ஆசிரியர் என். எஸ். எஸ் திட்ட அலுவலர் மற்றும் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியர்கள் இருப்பார்கள்.  எனவே மாணவர்கள்

பள்ளிகளில் உள்ள இந்த வழிகாட்டும் குழுவை அணுகி  தன்னுடைய விருப்பம் என்ன? மேற்படிப்பு எங்கெங்கு எந்த கல்லூரியில் இருக்கிறது? எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? விண்ணப்பங்களை எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும்? ஆன்லைன் விண்ணப்பம் என்றால் எவ்வாறு இணையதளத்தில் பதிவு செய்வது என்பன போன்ற பல தகவல்களை எளிதாக உங்கள் ஊரிலேயே உங்கள் பள்ளியிலேயே பெற முடியும். 

மேலும் பொறியியல் கல்லூரிகளில் வெவ்வேறு பிரிவுகளுக்கு ( எம்பிசி, பிசி, எஸ்சி, எஸ்டி ,பிசி இஸ்லாம் ,மற்றும் அருந்ததியர்) கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு விளையாட்டு பிரிவு இட ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள், 7.5 சதவீத இடஒதுக்கீடு என்பன போன்ற தகவல்களை இந்த உயர் கல்வி வழிகாட்டி மையத்தில் உங்கள் ஊரில் அமைந்துள்ள பள்ளியிலேயே பெற முடியும். கூடுதலாக நீங்கள் தேர்வு செய்யும் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள முடியும். 

சரி நல்ல மதிப்பெண்கள் பெற்று விட்டேன். ஆனால் என்னால் மேற்படிப்பு படிக்க பணவசதி இல்லை என்ற நிலையில் உள்ள மாணவர்களுக்கு வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது எப்படி? அதற்கென எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பன போன்ற விவரங்களை விரிவாகவும் விளக்கமாகவும் பெறலாம். 

கல்லூரிகளில் உயர்கல்வி படிக்கும் போது கிடைக்கும் கல்வி உதவித் தொகைகள் ( ஸ்காலர்ஷிப்) எவை எவை? அவற்றை பெறுவது எப்படி? என்பன போன்ற விவரங்களையும் முழுமையாக தெரிந்து கொள்ள இந்த மையங்கள் உங்களுக்கு வழிகாட்டும். 

அதேபோல் இந்த மையங்கள் +2 தேர்வில் வெற்றி பெறாமல் போன மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து உடனடி தேர்வுக்கு விண்ணப்பிக்க வைத்து அவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு தனி கவனம் செலுத்தி பயிற்சியளித்து உடனடியாக இந்த கல்வி ஆண்டிலேயே கல்லூரிகளில் சேர தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்கள். 

அதேபோல் இந்த ஆண்டு +2 தேர்வு எழுதிய  மாணவர்கள் அனைவரும் 100 சதவீதம் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்த்து விட்டார்கள் என்கிற  இலக்கினை அடையும் வகையில்  இந்த உயர் கல்வி வழிகாட்டி குழுவினர் பணியாற்றிட உள்ளனர். 

நான் முதல்வன் திட்டம் காரணமாக இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் ஆயிரக்கணக்கானோர் ஜேஇஇ, நீட் போன்ற தேர்வுகளுக்கு பதிவு செய்து உள்ளனர் என்பது இத்திட்டத்தின் மிகப் பெரிய சாதனையாகும். 

எனவே ஒவ்வொரு மாணவரும் தயக்கமின்றி, அச்சமின்றி அவரவர் பள்ளிகளில் உள்ள இத்தகைய உயர்கல்வி வழிகாட்டி மையங்களை அணுகி தங்கள் உயர்கல்வி கனவு நனவாக மையங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவரின் விருப்பத்திற்கேற்ப உயர்கல்வி வாய்ப்புகள், கல்வி உதவித் தொகைகள் , வங்கி கடன் வசதிகள் என்பன போன்ற பல விவரங்களை கேட்டு பெற்று மாணவக் கண் மணிகள் வாழ்வில் உன்னத நிலையை அடைய வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் நோக்கமாகும். 

என்ன தம்பி புறப்பட்டாச்சா? நம்ம பள்ளிக்கூடத்திற்கு போய் இன்று முதல் உயர்கல்வி வழிகாட்டி மையத்தில் உள்ள ஆசிரியர்களை சந்தித்து எதிர்காலம் குறித்த தெளிவான, திடமான, தீர்க்கமான முடிவை எடுத்துவிட வேண்டியது தானே!!!. 

பள்ளிக்கும் போக முடியாத சூழ்நிலையா அதற்கும் தமிழ்நாடு அரசு மாற்று ஏற்பாடு செய்திருக்கிறதே  ? 

14417 என்கிற உயர்கல்வி வழிகாட்டும் உதவி மையத்திற்கு போன் செய்து ( காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை) மேலே கட்டுரையில் குறிப்பிட்டுள்ள விஷயங்களை தெளிவாகவும் விளக்கமாகவும் போனிலேயே பெற்றுக் கொள்ளலாம். 

தமிழ்நாடு அரசு செய்து தந்திருக்கும் இந்த அரிய வாய்ப்பினை மாணவச் செல்வங்களே பயன்படுத்துங்கள். 

ஆசிரியச் சகோதரர்களே வழிகாட்டிடுங்கள்.

+2 தேர்வு முடிவுகள்

 12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் இன்று வெளியீடு- உங்கள் மொபைலில் பிளஸ் 2 மதிப்பெண் பார்க்க DIRECT Link Avail-PLUS 2-RESULTS,

12 ஆம் வகுப்பு மதிப்பெண் முடிவுகள் - காலை 9.30 மணிக்கு வெளியாகிறது -

உங்கள் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் முடிவுகள் ஆன்லைனில் எவ்வாறு பார்க்கலாம்

 முதலில்  நீங்கள் கீழ்கண்ட  link ஏதாவது ஒன்றினை கிளிக் செய்யுங்க

http://tnresults.nic.in

http://tnresults.nic.in

 

அதில் தமிழ்நாடு HSE (+2) மார்ச் 2023 தேர்வு முடிவுகள் இணைப்பைக் கிளிக் செய்க

அடுத்து அதில் உங்கள் ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதி,மாதம், வருடம் ஆகிய விவரங்களை உள்ளிடவும்

அடுத்து அதில் சமர்ப்பி பட்டனைக் கிளிக் செய்யவும்

 

இப்போது நீங்கள் உங்கள் 12 ம் வகுப்பு தேர்வு ரிசல்ட்பார்க்கலாம்.

மாணவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.