Sunday, May 7, 2023

உன்னால் முடியும்

 இன்று பிளஸ் டூ ரிசல்ட் வருகிறது. 


முன்பொரு காலம் இருந்தது . உலகின் அனைத்து ஊடகங்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்தவர்களைக் கொண்டாடி தீர்த்த காலம் அது . இல்லாவிட்டால் நூலிழையில் முதல் மதிப்பெண்ணை தவற விட்டவர்கள் பின்னால் போய் இப்போது உங்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என ஓயாமல் கேட்டுக் கொண்டிருந்த காலம் அது. 

தமிழ் பாடத்தை எடுத்து மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்றவர் ..... பிரெஞ்சு படித்து முதல் மதிப்பெண் பெற்றவர்.... சமஸ்கிருதம் படித்து முதலில் வந்தவர் .....என ஆளாளுக்கு கூவிக் கொண்டிருந்த  காலம்.

தமிழ்ப் பாடத்தைப் படித்தவர் மட்டுமே மாநிலத்தின் முதல் மதிப்பெண் பெற்றவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதெல்லாம் காற்றில் பறந்த காலம் அது.  ஒவ்வொரு ஊடகமும் உள்ளூர் சேனலும் போட்டி போட்டுக்கொண்டு சொல்வதைக் கண்டு குழம்பிப் போனவர்கள்தான் அநேகம் பேர்.

ஏதேதோ காரணங்களால் வெற்றிக்கான பாதையை விட்டு விலகியவரைப் பற்றிய குறிப்புகள் எங்குமே இருக்காது. தோல்வியின் துயர் தாங்காது கல்வியின் பாதையில் இருந்து விலகிப் போனவர்கள்தான் அநேகம் பேர்.

இன்று மொத்தமும் மாறியிருக்கிறது..அவரவர் மதிப்பெண்ணை அவரவர் அறிந்தால் மட்டுமே  போதுமானது, பள்ளி அளவில் கூட முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களை அறிவிக்கக் கூடாது என அறிவிப்பு இருக்கிறது.

இந்த வருடம் மே எட்டாம்  தேதியிலிருந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் அனைத்து முதுகலை ஆசிரியர்களும் பள்ளியில் இருப்பார்கள். அனைத்து மாணவர்களையும் பள்ளிக்கு வரவழைத்து  உயர் கல்வி வழிகாட்டி குழு அமைக்கப்பட்டு மேற்படிப்பு குறித்த அனைத்து தகவல்களையும் மாணவர்களிடம் பகிர்வார்கள். ஒவ்வொரு மாணவரும் படிக்க விரும்பும் பாடம்..கல்லூரி..நல்ல கல்லூரிகள் பற்றிய தகவல்கள் , கல்வி லோன் எடுக்கும் முறைகள், நிதி உதவி செய்யும் ஃபவுண்டேஷன் பற்றிய தகவல்கள் அனைத்தையும் மாணவர்களுக்கு தருவார்கள்.

தேர்வில் தோல்வியடைந்த  மாணவர்களுக்கு கவுன்சிலிங் தந்து பெற்றோர்களை அழைத்து பேசி அடுத்த தேர்வுக்கு ஆயத்தப் படுத்த வேண்டும்..  என அரசு அறிவுறுத்தியுள்ளது.  இவை அனைத்தையும் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு மிகுந்த அக்கறையுடனும்  பொறுப்புணர்வோடும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

அனைத்து மாணவர்களும் உயர்கல்வி படிப்பைத் தொடர வேண்டும் என்பதில் அரசு தீவிர முனைப்பு காட்டுகிறது. ஆசிரியர்கள் பள்ளிகளில் உதவத் தயாராக உள்ளனர்.

எனவே அனைத்து பெற்றோரும் நண்பர்களும் கல்வியாளர்களும்   தங்களால் இயன்ற உதவியை தேவைப்படும் குழந்தைகளுக்குத் தந்து " நான் முதல்வன்" திட்டம் மூலம் பயன்பெறுமாறு  அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நான் முதல்வன்

 +2 மாணவர்களே     நான் முதல்வன் திட்டத்தை பயன்படுத்துங்கள்.... 

இன்று (மே8) பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றிபெற வாழ்த்துக்கள்! 

+2 தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தவர்களுக்குப் பிரச்னையில்லை. 

மருத்துவம், பொறியியல் என அவர்களுக்கான தேடல் விரிகிறது. 

குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள்.. கவலைப்பட வேண்டாம்..

அதற்காக மனம் உடையத் தேவையில்லை. ஏகப்பட்ட வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. சொல்லப் போனால், பொறியியல், மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்குக் கிடைக்காத பெரிய பெரிய வாய்ப்புகள் எல்லாம் இவர்களுக்காகக் காத்திருக்கின்றன.

மதிப்பெண் என்பது ஒரு தகுதி. ஒரே தகுதியல்ல.வாழ்க்கையில்  நல்ல மதிப்பெண் பெறுபவரே புத்திசாலி, பெற முடியாதவர் புத்திசாலி அல்ல என்ற கற்பிதமே தவறானது. மதிப்பெண்ணுக்கும் அறிவுக்கும் பெரிய தொடர்பில்லை. சூழ்

நிலையும், பொருளாதாரப் பின்னணியும்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருக்கிறது. மதிப்பெண் குறைந்ததற்காக வருந்தவும், குழப்பம் அடையவும் அவசியமில்லை. 

முதலில் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். மருத்துவமும் பொறியியலும் மட்டுமே படிப்பல்ல. 250க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய துறைகள் உண்டு. 

ஏராளமான மருத்துவம் சார்ந்த படிப்புகள் ( பிசியோதெரபி, நர்சிங், லேப் டெக்னிஷியன், பார்மசிஸ்ட்  )  மற்றும் மீன்வளத்துறை வேளாண்மை துறை தோட்டக்கலை துறை உடற்கல்வி துறை கால்நடை மருத்துவ துறை கடல்சார் துறை சட்டத் துறை இசைத் துறை ஓவியத் துறை சிற்பத் துறை மீடியா துறை ராணுவ துறை என பல்வேறு துறைகளில் உயர் கல்வி வாய்ப்புகள் உள்ளன. மேலும் கலை அறிவியல் சார்ந்த படிப்புகளும் ஏராளம். 

மதிப்பெண் கிடக்கட்டும். கவலையை விடுங்கள். இந்த உலகம் எல்லோருக்குமானது. நீங்கள் சாதிக்க இந்த உலகத்தில் பரந்த வெளிகள் உண்டு. சரியானதைத் தேர்வு செய்யுங்கள். அதில் முழுக்கவனத்தையும் செலுத்தி படியுங்கள். நிச்சயம் சிகரம் தொடுவீர்கள்!

அதேபோல் தேர்வில் வெற்றி பெற தவறிய மாணவர்களும் கவலை பட தேவையில்லை.சோர்ந்து போய் மூலையில் முடங்கி விட வேண்டாம். விரைவில் நடக்க உள்ள உடனடி தேர்வுகளில் ( இன்ஸ்டன்ட் எக்ஸாம்) கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று இந்த கல்வியாண்டினை  வீணாக்காமல்  பொறியியல் கல்லூரிகளில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து விட முடியும்.

மேலும் நமது தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறை இணைந்து நாட்டுநலப்பணித்திட்டத்துடன் கரம் கோர்த்து நான் முதல்வன் என்கிற திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி களிலும் (  3123  பள்ளிகளில்) உயர்கல்வி வழிகாட்டி மையத்தினை  ( CAREER GUIDANCE CELL)  ஏற்படுத்தி உள்ளது. 

நான் முதல்வன் திட்டம் அடுத்து என்ன படிப்பது என்று திசை தெரியாமல் திகைக்கும் மாணவர்களுக்கு ஒரு திசைகாட்டி ,கலங்கரை விளக்கம். ஏழை எளிய மாணவர்களுக்கு ஓர் வரப்பிரசாதம். 

இந்த குழுவில் தலைமை ஆசிரியர் என். எஸ். எஸ் திட்ட அலுவலர் மற்றும் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியர்கள் இருப்பார்கள்.  எனவே மாணவர்கள்

பள்ளிகளில் உள்ள இந்த வழிகாட்டும் குழுவை அணுகி  தன்னுடைய விருப்பம் என்ன? மேற்படிப்பு எங்கெங்கு எந்த கல்லூரியில் இருக்கிறது? எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? விண்ணப்பங்களை எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும்? ஆன்லைன் விண்ணப்பம் என்றால் எவ்வாறு இணையதளத்தில் பதிவு செய்வது என்பன போன்ற பல தகவல்களை எளிதாக உங்கள் ஊரிலேயே உங்கள் பள்ளியிலேயே பெற முடியும். 

மேலும் பொறியியல் கல்லூரிகளில் வெவ்வேறு பிரிவுகளுக்கு ( எம்பிசி, பிசி, எஸ்சி, எஸ்டி ,பிசி இஸ்லாம் ,மற்றும் அருந்ததியர்) கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு விளையாட்டு பிரிவு இட ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள், 7.5 சதவீத இடஒதுக்கீடு என்பன போன்ற தகவல்களை இந்த உயர் கல்வி வழிகாட்டி மையத்தில் உங்கள் ஊரில் அமைந்துள்ள பள்ளியிலேயே பெற முடியும். கூடுதலாக நீங்கள் தேர்வு செய்யும் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள முடியும். 

சரி நல்ல மதிப்பெண்கள் பெற்று விட்டேன். ஆனால் என்னால் மேற்படிப்பு படிக்க பணவசதி இல்லை என்ற நிலையில் உள்ள மாணவர்களுக்கு வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது எப்படி? அதற்கென எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பன போன்ற விவரங்களை விரிவாகவும் விளக்கமாகவும் பெறலாம். 

கல்லூரிகளில் உயர்கல்வி படிக்கும் போது கிடைக்கும் கல்வி உதவித் தொகைகள் ( ஸ்காலர்ஷிப்) எவை எவை? அவற்றை பெறுவது எப்படி? என்பன போன்ற விவரங்களையும் முழுமையாக தெரிந்து கொள்ள இந்த மையங்கள் உங்களுக்கு வழிகாட்டும். 

அதேபோல் இந்த மையங்கள் +2 தேர்வில் வெற்றி பெறாமல் போன மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து உடனடி தேர்வுக்கு விண்ணப்பிக்க வைத்து அவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு தனி கவனம் செலுத்தி பயிற்சியளித்து உடனடியாக இந்த கல்வி ஆண்டிலேயே கல்லூரிகளில் சேர தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்கள். 

அதேபோல் இந்த ஆண்டு +2 தேர்வு எழுதிய  மாணவர்கள் அனைவரும் 100 சதவீதம் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்த்து விட்டார்கள் என்கிற  இலக்கினை அடையும் வகையில்  இந்த உயர் கல்வி வழிகாட்டி குழுவினர் பணியாற்றிட உள்ளனர். 

நான் முதல்வன் திட்டம் காரணமாக இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் ஆயிரக்கணக்கானோர் ஜேஇஇ, நீட் போன்ற தேர்வுகளுக்கு பதிவு செய்து உள்ளனர் என்பது இத்திட்டத்தின் மிகப் பெரிய சாதனையாகும். 

எனவே ஒவ்வொரு மாணவரும் தயக்கமின்றி, அச்சமின்றி அவரவர் பள்ளிகளில் உள்ள இத்தகைய உயர்கல்வி வழிகாட்டி மையங்களை அணுகி தங்கள் உயர்கல்வி கனவு நனவாக மையங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவரின் விருப்பத்திற்கேற்ப உயர்கல்வி வாய்ப்புகள், கல்வி உதவித் தொகைகள் , வங்கி கடன் வசதிகள் என்பன போன்ற பல விவரங்களை கேட்டு பெற்று மாணவக் கண் மணிகள் வாழ்வில் உன்னத நிலையை அடைய வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் நோக்கமாகும். 

என்ன தம்பி புறப்பட்டாச்சா? நம்ம பள்ளிக்கூடத்திற்கு போய் இன்று முதல் உயர்கல்வி வழிகாட்டி மையத்தில் உள்ள ஆசிரியர்களை சந்தித்து எதிர்காலம் குறித்த தெளிவான, திடமான, தீர்க்கமான முடிவை எடுத்துவிட வேண்டியது தானே!!!. 

பள்ளிக்கும் போக முடியாத சூழ்நிலையா அதற்கும் தமிழ்நாடு அரசு மாற்று ஏற்பாடு செய்திருக்கிறதே  ? 

14417 என்கிற உயர்கல்வி வழிகாட்டும் உதவி மையத்திற்கு போன் செய்து ( காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை) மேலே கட்டுரையில் குறிப்பிட்டுள்ள விஷயங்களை தெளிவாகவும் விளக்கமாகவும் போனிலேயே பெற்றுக் கொள்ளலாம். 

தமிழ்நாடு அரசு செய்து தந்திருக்கும் இந்த அரிய வாய்ப்பினை மாணவச் செல்வங்களே பயன்படுத்துங்கள். 

ஆசிரியச் சகோதரர்களே வழிகாட்டிடுங்கள்.

+2 தேர்வு முடிவுகள்

 12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் இன்று வெளியீடு- உங்கள் மொபைலில் பிளஸ் 2 மதிப்பெண் பார்க்க DIRECT Link Avail-PLUS 2-RESULTS,

12 ஆம் வகுப்பு மதிப்பெண் முடிவுகள் - காலை 9.30 மணிக்கு வெளியாகிறது -

உங்கள் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் முடிவுகள் ஆன்லைனில் எவ்வாறு பார்க்கலாம்

 முதலில்  நீங்கள் கீழ்கண்ட  link ஏதாவது ஒன்றினை கிளிக் செய்யுங்க

http://tnresults.nic.in

http://tnresults.nic.in

 

அதில் தமிழ்நாடு HSE (+2) மார்ச் 2023 தேர்வு முடிவுகள் இணைப்பைக் கிளிக் செய்க

அடுத்து அதில் உங்கள் ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதி,மாதம், வருடம் ஆகிய விவரங்களை உள்ளிடவும்

அடுத்து அதில் சமர்ப்பி பட்டனைக் கிளிக் செய்யவும்

 

இப்போது நீங்கள் உங்கள் 12 ம் வகுப்பு தேர்வு ரிசல்ட்பார்க்கலாம்.

மாணவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.