Sunday, May 7, 2023

உன்னால் முடியும்

 இன்று பிளஸ் டூ ரிசல்ட் வருகிறது. 


முன்பொரு காலம் இருந்தது . உலகின் அனைத்து ஊடகங்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்தவர்களைக் கொண்டாடி தீர்த்த காலம் அது . இல்லாவிட்டால் நூலிழையில் முதல் மதிப்பெண்ணை தவற விட்டவர்கள் பின்னால் போய் இப்போது உங்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என ஓயாமல் கேட்டுக் கொண்டிருந்த காலம் அது. 

தமிழ் பாடத்தை எடுத்து மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்றவர் ..... பிரெஞ்சு படித்து முதல் மதிப்பெண் பெற்றவர்.... சமஸ்கிருதம் படித்து முதலில் வந்தவர் .....என ஆளாளுக்கு கூவிக் கொண்டிருந்த  காலம்.

தமிழ்ப் பாடத்தைப் படித்தவர் மட்டுமே மாநிலத்தின் முதல் மதிப்பெண் பெற்றவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதெல்லாம் காற்றில் பறந்த காலம் அது.  ஒவ்வொரு ஊடகமும் உள்ளூர் சேனலும் போட்டி போட்டுக்கொண்டு சொல்வதைக் கண்டு குழம்பிப் போனவர்கள்தான் அநேகம் பேர்.

ஏதேதோ காரணங்களால் வெற்றிக்கான பாதையை விட்டு விலகியவரைப் பற்றிய குறிப்புகள் எங்குமே இருக்காது. தோல்வியின் துயர் தாங்காது கல்வியின் பாதையில் இருந்து விலகிப் போனவர்கள்தான் அநேகம் பேர்.

இன்று மொத்தமும் மாறியிருக்கிறது..அவரவர் மதிப்பெண்ணை அவரவர் அறிந்தால் மட்டுமே  போதுமானது, பள்ளி அளவில் கூட முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களை அறிவிக்கக் கூடாது என அறிவிப்பு இருக்கிறது.

இந்த வருடம் மே எட்டாம்  தேதியிலிருந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் அனைத்து முதுகலை ஆசிரியர்களும் பள்ளியில் இருப்பார்கள். அனைத்து மாணவர்களையும் பள்ளிக்கு வரவழைத்து  உயர் கல்வி வழிகாட்டி குழு அமைக்கப்பட்டு மேற்படிப்பு குறித்த அனைத்து தகவல்களையும் மாணவர்களிடம் பகிர்வார்கள். ஒவ்வொரு மாணவரும் படிக்க விரும்பும் பாடம்..கல்லூரி..நல்ல கல்லூரிகள் பற்றிய தகவல்கள் , கல்வி லோன் எடுக்கும் முறைகள், நிதி உதவி செய்யும் ஃபவுண்டேஷன் பற்றிய தகவல்கள் அனைத்தையும் மாணவர்களுக்கு தருவார்கள்.

தேர்வில் தோல்வியடைந்த  மாணவர்களுக்கு கவுன்சிலிங் தந்து பெற்றோர்களை அழைத்து பேசி அடுத்த தேர்வுக்கு ஆயத்தப் படுத்த வேண்டும்..  என அரசு அறிவுறுத்தியுள்ளது.  இவை அனைத்தையும் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு மிகுந்த அக்கறையுடனும்  பொறுப்புணர்வோடும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

அனைத்து மாணவர்களும் உயர்கல்வி படிப்பைத் தொடர வேண்டும் என்பதில் அரசு தீவிர முனைப்பு காட்டுகிறது. ஆசிரியர்கள் பள்ளிகளில் உதவத் தயாராக உள்ளனர்.

எனவே அனைத்து பெற்றோரும் நண்பர்களும் கல்வியாளர்களும்   தங்களால் இயன்ற உதவியை தேவைப்படும் குழந்தைகளுக்குத் தந்து " நான் முதல்வன்" திட்டம் மூலம் பயன்பெறுமாறு  அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

No comments: