Sunday, December 28, 2014

Pallikudam

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை - கிராமப்புற மாணவர்கள் பாதிப்பு

           கடந்த சில நாட்களுக்கு முன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. இந்த அட்டவணை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

           பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 19ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டடுள்ளது. இந்த ஆண்டு வழக்கத்தை விட 15 நாட்கள் முன்னதாகவே தேர்வுகளை தொடங்குவது மாணவர்களுக்கு அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 12ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 31ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் அதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டிய அவசியம் என்ன என கல்வியாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இதனால் செலவு குறையும் என  கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், தேர்வு விவகாரங்களில் இது போன்ற நடவடிக்கை தவறென என குறிப்பிடுகின்றனர். ""தமிழக அரசு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய்களை மாணவர்கள் நலனுக்காக பள்ளிகள் தொடங்குவதிலும், விலையில்லா திட்டங்களை நிறைவேற்றுவதிலும் செலவிடுகிறது. இதனை ஒப்பிடுகையில் 10ம் வகுப்பு தேர்வை முன்கூட்டியே நடத்துவதன் மூலம் மிக சொற்பமான தொகையையே மிச்சப்படுத்த இயலும். மாணவர்களின் எதிர்கலத்தை பாதிக்கக்கூடிய தேர்வு விஷயத்தில் கல்வித்துறை கவனமாக இருக்க வேணடும்,'' என்று குறிப்பிடுகின்றனர். மேலும் தேர்வை முன்கூட்டியே நடத்துவதால், பட்டதாரி ஆசிரியர்கள் கண்காணிப்பு மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு முன்னதாகவே சென்றுவிடுவர். இதனால் 6 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாதிப்பு எற்படும்.

           தேர்வு அட்டவணையில் ஆங்கிலத்தேர்வுக்கு விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை. தனியார் சுயநிதி பள்ளிகளில் மாணவர்கள் ஆங்கில வழி கல்வி கற்பதால் அவர்கள் ஆங்கிலத் தேர்வை எளிதில் எதிர்கொள்ள இயலும். ஆனால் கிராமப்புறங்களில் அரசுப்பள்ளி மாணவர்களின் நிலையோ பரிதாபமானது. இது குறித்து அரசுப்பள்ளியில் பணியாற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ஒருவர் குறிப்பிடும் போது, ""9ம் வகுப்பு வரை முப்பருவ கல்விமுறையில் பயின்ற மாணவர்கள் இந்த ஆண்டு தான் 100 மதிப்பெண் தேர்வுகளை எதிர்கொள்ள உள்ளனர். குறிப்பாக ஆங்கில பாடத்தில் கேள்வித்தாள் முற்றிலுமாக மாறியிருக்கும். இந்நிலையில் ஆங்கிலத்தேர்வுக்கு விடுமுறை இல்லை என அறிவித்திருப்பது கண்டிப்பாக தேர்ச்சி விகிதத்தை பாதிக்கக்கூடிய நடவடிக்கை. இதனால் தேர்ச்சி விகிதம் குறைந்தால் ஆசிரியர்களே பலிகடா ஆக்கப்படுவர்கள். அடுத்த ஆண்டு நடைபெறும் ஆய்வுக்கூட்டங்களில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளிடம் காரணம் கேட்கும் போது, பொதுத்தேர்வு அட்டவணையை காரணமாக கூறக்கூடாது என அறிவுறுத்தப்படும். இந்த அட்டவணை ஆங்கில ஆசிரியர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களிடையே கடுமையான குழப்பத்தை எற்படுத்தியுள்ளது, '' என்று குறிபிடுகிறார்.

          பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் மாற்றம் வருமா என மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

No comments: