Saturday, December 28, 2013

PallikudamTAMS

நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு 25 சதவீதம் பதவி உயர்வு அளிக்க கோரிக்கை

           "நேரடி முதுகலை ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்கப்படும், 50 சதவீதத்தில், 25 சதவீதத்தை, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கி, பதவி உயர்வு செய்ய வேண்டும்" என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், வலியுறுத்தி உள்ளது.
          சங்க தலைவர், தியாகராஜன், பள்ளி கல்வி இயக்குனருக்கு அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தொடக்க கல்வித் துறையின் கீழ், நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியரில், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்தவர்களுக்கு, கடைசி வரை பதவி உயர்வே கிடையாது. பள்ளி கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் மட்டும், கல்வி தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு பெற முடிகிறது.
            தற்போது முதுகலை ஆசிரியர் காலி இடங்களில் 50 சதவீதம், பதவி உயர்வு மூலமும், 50 சதவீதம், நேரடி நியமனம் மூலமும் நிரப்பப்படுகின்றன. இதில், நேரடி நியமனத்திற்கான 50 சதவீத இடங்களில், 25 சதவீதத்தை, நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒதுக்கி, பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
          தியாகராஜன் கூறியதாவது: முதுகலை ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்தவர்கள், பட்டதாரி ஆசிரியர் பணிக்கும், தகுதியானவராக இருக்கின்றனர். எனவே, இரு தேர்வுகளிலும் அவர்கள் பங்கேற்கலாம். பட்டதாரி ஆசிரியர், அதிகளவில் தேர்வு செய்யப்படுவதால், அவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு உள்ளது.
            ஆனால், எங்களுக்கு, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வைத் தவிர, வேறு வாய்ப்பு இல்லை. எனவே, எங்களுக்கு, 25 சதவீதம் பதவி உயர்வு வழங்குவதால், யாருக்கும் பாதிப்பு ஏற்படாது, என்றார்.

No comments: