Thursday, December 12, 2013

PallikudamNEWS

ஆசிரியர்களுக்கு சம்பளம் தர மத்திய அரசு மறுப்பு தமிழக கல்வி துறை அவசர ஆலோசனை

               அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் (எஸ்.எஸ்.ஏ.,) பணியாற்றும், வட்டார வள மைய ஆசிரியர், 4,500 பேருக்கு, சம்பளமாக, 148 கோடி ரூபாய் வழங்க, மத்திய அரசு மறுத்துள்ளது. இதனால், இந்த ஆசிரியரை, மாநில அரசின் சம்பள கணக்கிற்கு மாற்றுவது குறித்து, கல்வித் துறை அவசரமாக ஆலோசித்து வருகிறது.
          அனைவருக்கும் கல்வி திட்டம், மத்திய இடைநிலை கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) உள்ளிட்ட சில திட்டங்களுக்கு, மத்திய அரசு நிதி உதவி அளித்து வருகிறது.
           ஆசிரியர் சம்பளம் உள்ளிட்ட, பல திட்டங்களுக்கு, ஆண்டுதோறும் நிதி வழங்குகிறது. இதில், எஸ்.எஸ்.ஏ., கீழ், ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிக்கும் பணியில், வட்டார வள மைய ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வட்டார வாரியாக, 4,500 பேர், பணிபுரிந்து வருகின்றனர். பட்டதாரி ஆசிரியர் நிலையில் பணியாற்றி வரும் இவர்களுக்கு, மத்திய அரசு நிதியில் இருந்து தான், சம்பளம் வழங்கப்படுகிறது. 'இந்த வகையில், 148 கோடி ரூபாய் தர முடியாது' என, மத்திய அரசு கைவிரித்து விட்டதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
          இதனால், 4,500 ஆசிரியருக்கும், இம்மாதம் சம்பளம் தர முடியாத நிலை உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், 148 கோடி ரூபாய் நிதியை, தமிழக அரசு விடுவிக்கக் கோரி, எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள், கடிதம் எழுதி உள்ளதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரச்னையை சரி செய்யும் வகையில், மத்திய அரசு சம்பள பட்டியலில் உள்ள ஆசிரியர் அனைவரையும், மாநில சம்பள கணக்கிற்கு மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

No comments: