Thursday, July 2, 2015

Pallikudam

90 சதவீதம் பேர், ஹெல்மெட் அணிந்து சென்றதால், உயர் நீதிமன்ற உத்தரவு வெற்றி அடைந்துள்ளது என, போலீசார் பெருமிதம்
          'இருசக்கர வாகன ஓட்டிகள், ஹெல்மெட் அணிந்து செல்வது கட்டாயம். இந்த உத்தரவு, ஜூலை, 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

          இதையடுத்து, மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், 'இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்வோரும், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டது. 'ஹெல்மெட் அணிய தவறினால், இருசக்கர வாகன ஓட்டிகளின் உரிமம், வாகன பதிவு சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து அசல் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படும்' என்றும் அறிவிக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் மற்றும் மாநில அரசு பிறப்பித்த உத்தரவு, நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதனால், மாநிலத்தில் உள்ள, இருசக்கர வாகன உரிமையாளர்களில், 90 சதவீதம் பேர், நேற்று ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்டினர். பின்னால் அமர்ந்து இருந்தோர் மற்றும் பெண்கள், 65 சதவீதம் பேரும், ஹெல்மெட் அணிந்து சென்றது, போலீசார் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்தது.


மாநிலம் முழுவதும் போலீசார், மறைவான இடங்களில், தனித்தனியாக காத்து நின்றனர்.
ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை விசில் அடித்து மடக்கிய போலீசார், எந்த ஆவணமும் இல்லாதவர்களிடம், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, படிவம் ஒன்றில், வாகன ஓட்டியின் பெயர், பிடிபட்ட இடம், ஆவணங்கள்
திரும்ப பெற வேண்டிய நீதிமன்றம், மொபைல்போன் எண்ணை நிரப்பி, ஒப்புகை சான்று வழங்கினர்.ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்று போன்றவற்றுக்கான அசல் ஆவணங்களை வைத்திருந்தவர்களிடம், ஹெல்மெட் வாங்கி விட்டதற்கான ரசீதை சமர்ப்பித்ததும், நீதிமன்றத்தில் அசல் ஆவணங்களை பெற்றுக் கொள்ளும் வகையில், படிவம் எண் இரண்டில், ஒப்புகை சான்று வழங்கினர். ஆனால், வாகனங்களை விடுவித்து விட்டனர்.
கெடுபிடி தள்ளிவைப்பு:
'ஹெல்மெட் கட்டாயம்' என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின், ஏராளமானவர்கள், ஒரே நேரத்தில், ஹெல்மெட் வாங்க குவிந்ததால், சென்னையில் மட்டுமின்றி, மாநிலத்தின் பல பகுதிகளிலும் உள்ள கடைகளில், ஹெல்மெட்கள் விற்றுத் தீர்ந்து விட்டன. நேற்றைய நிலவரப்படி, ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற்ற ஹெல்மெட், 1,500 ரூபாய் வரை விற்கப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு பிரச்னையாலும், பணப்பற்றாக்குறை உட்பட, வேறு சில பிரச்னைகளாலும், மாதச் சம்பளம் பெறும் பலர், ஹெல்மெட் வாங்காமல் உள்ளனர். எனவே, ஹெல்மெட் விஷயத்தில், அதிக கெடுபிடி காட்டுவதை, சில நாட்களுக்கு மட்டும் தள்ளிப்போட, போலீசார் முடிவு செய்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.

தேவையில்லாமல், இருசக்கர வாகன ஓட்டிகளை தொந்தரவு செய்யக்கூடாது என, போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது. கட்டாய ஹெல்மெட் உத்தரவு நேற்று நடைமுறைக்கு வந்தபின், காலை, 9:00 மணியில் இருந்து, இரவு, 7:00 மணி வரை, 1,008 வாகனங்கள் சிக்கின. அதில், 556 வாகன ஓட்டிகளின் உரிமங்கள் மற்றும் 452 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
ஜார்ஜ்
போலீஸ் கமிஷனர், சென்னை
Thanks
Pada Salai

No comments: