Monday, August 18, 2014

செய்தி

பள்ளி கல்வித்துறையின் நடமாடும் ஆலோசனை மையங்கள் - பலன் எப்படி?

          பதின்பருவம்... ஒரு புதிர்பருவம்! அந்த பருவத்தில், உடலும், உணர்வும் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் மாற துவங்க, உள்ளம் நினைவுகளை எங்கெங்கோ இழுத்துச் செல்ல, நெருங்கிய உறவுகள் சுருங்க, புதிதாய் உறவுகள் நெருங்க ஆரம்பிக்கின்றன. வயதை போலவே, ஆசை, நிராசை, ஏமாற்றம், ஏளனம், குழப்பம், கலக்கம் என, பழக்கப்படாதவைகளின் பட்டியல் நீள துவங்குகின்றன.

     குழந்தையாக இருந்தபோது, இறகுகளை போல லேசாக இருந்த புத்தகங்கள், பதின்பருவத்தில் பாராங்கல்லை போல பாரமாக மாறுகிறது. காலம் காலமாக இந்த பிரச்னைகள், இளைய சமூகத்தை ஆட்டிப்படைத்தாலும், முன்பெல்லாம், தாத்தா, பாட்டிகள் அன்பாய் அணைத்து, ஆறுதலாய் பேசி, எண்ணங்களை திசை திருப்பி, ஏமாற்றங்களுக்கு பழக்கி, இளைஞர்களை வழிநடத்தினர்.

          ஆனால், இன்றைய இளைய சமூகம் பாவம்! இவர்களின் தாத்தா, பாட்டிகள் ஆசிரமத்தில். தாயும், தந்தையும் அலுவலகத்தில். நண்பர்கள் முகநுாலில். யாரிடம் பகிர்ந்து கொள்வர் தங்களின் உணர்வுகளை? பகிரப்படாத அன்பு தற்கொலையாகவும், ஏற்கப்படாத அன்பு வன்முறையாகவும் மாறுவதால், அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது யார்?

ஆலோசனை மையங்கள்

கடந்த ஆண்டு முதல், மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க அரசே முன்வந்தது. 10 நடமாடும் ஆலோசனை மையங்கள், பள்ளி கல்வித்துறையின் சார்பில் முளைத்தன. அதில், பலன் உண்டா? என்பதை பரிசோதிக்க, செங்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு சென்றோம். ஆலோசனை பெற்று வந்த, பிளஸ் 2 மாணவியரிடம் பேசினோம்.

"இந்த ஏற்பாடு வரவேற்கத்தக்கது. எங்களின் உடல், மனரீதியாக ஏற்படும் குழப்பங்கள், எங்கள் பருவத்துக்கே உரியதுதான் என்பதை தெரிந்து கொண்டோம். தினம்தோறும், ஒரு மணி நேரமாவது, பெற்றோரிடம் இயல்பாக பேச வேண்டும் என முடிவு செய்திருக்கிறோம். 
ஆண், பெண் நட்பு பற்றியும், அதன் எல்லை பற்றியும் தெரிந்து கொண்டோம். நம் உடலில், நமக்கு மட்டுமே சொந்தமான பகுதிகளை, அடுத்தவர்கள் பார்ப்பதையோ, தொடுவதையோ தைரியமாக எதிர்க்க வேண்டும் என்ற கருத்துடன் அமைந்த ஆவணப்படம், எங்களுக்கு நிறைய புரிதல்களை ஏற்படுத்தி இருக்கிறது.

பெண்களுக்கு ஆதரவான சட்டங்களை பற்றி தெரிந்து கொண்டோம். இதுபோன்ற ஆலோசனைகளை, பெற்றோர்களுக்கும் ஏற்பாடு செய்தால், எங்கள் உறவு நன்றாக இருக்கும்" என்றனர்.

மாணவியருடன் இயல்பாக பேசி, அவர்களின் எண்ணங்களை தெரிந்துகொண்டு, அதற்கான ஆலோசனைகளை வழங்கி கொண்டிருந்த, சென்னை மண்டல, நடமாடும் ஆலோசனை மையத்தின் உளவியல் ஆலோசகர் பேபி தேவ கிருபாவிடம் பேசினோம்...

"பதின்பருவத்தினருக்கு, ஏற்படும் குழப்பங்களையும், பிரச்னைகளையும் தீர்த்து, அவர்களை படிப்பில் சாதனையாளர்களாக மாற்றுவதே எங்கள் எண்ணம். குடும்பம், தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில், மென்மையாக ஆலோசனை வழங்குகிறோம். தமிழகத்தில், சென்னை, வேலுார், திருச்சி, தஞ்சாவூர், சேலம், புதுக்கோட்டை, மதுரை, கோயம்புத்துார், கடலுார், திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடமாடும் ஆலோசனை மையங்கள் உள்ளன.

வெற்றி தந்த ஆலோசனை

சென்னை மண்டலத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவடங்கள் உள்ளன. சென்னை மண்டலத்தில், இதுவரை, 87 பள்ளிகளுக்கு சென்று, 7,791 மாணவர்களுக்கும், 13,332 மாணவியருக்கும் ஆக, 21,123 பேருக்கு ஆலோசனைகள் வழங்கி உள்ளேன்.

சென்னை மாவட்டத்தில் மட்டும், 32 பள்ளிகளில், குழு ஆலோசனை மூலம் 9,372 தனி ஆலோசனை மூலம் 163 பேர் பயனடைந்திருக்கிறார்கள். இதில், 2,813 மாணவர்களும், 6,559 மாணவியரும் அடக்கம். இதனால், 2014ம் ஆண்டு நடந்த பொது தேர்வுகளில், அரசு பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சி 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

சூழும் பிரச்னைகள்

பொதுவாக, மாணவர்களிடம் உள்ள கற்றல் தொடர்பான பிரச்னைகள் என்றால், தேர்வு குறித்த பயம், பதற்றம், மறதி, கவன சிதைவு, கவன குறைவு, மீட்கொணர்வதில் சிரமம், தவறான கற்றல் முறை, ஆங்கிலத்தில் சரளமின்மை, ஆர்வமின்மை, துாக்கம், தன்னம்பிக்கையின்மை ஆகியவற்றை சொல்லாம்.

குடும்ப தொடர்பான பிரச்னைகள் என்றால், பிரிந்திருக்கும் பெற்றோரால் தவிப்பு, சந்தேகத்தால் தினமும் சண்டையிட்டுக் கொள்ளும் பெற்றோர், மது அருந்தும் பெற்றோர், ஆண், பெண் குழந்தைகளிடம் உரிமைகள், கடமைகள் சார்ந்து வேறுபாடு காட்டும் பெற்றோர் ஆகிய காரணங்களால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இவையின்றி, தனிப்பட்ட பிரச்னைகளாக, பகற்கனவு காணும் ஆளுமை கோளாறு, தற்கொலை எண்ணம், தாழ்வு மனப்பான்மை, எதிர்காலம் குறித்த பயம், அறிவற்ற மோகம், அதிலிருந்து விடுபடுவதில் குழப்பம், உடல் குறைபாடு, தாங்களே தண்டித்து கொள்ளுதல், வீட்டை விட்டு ஓடிப்போதல், சமூகத்தின் வக்கிர ஆதிக்கம், மன அழுத்தம், மது, புகை பழக்கம், கோபம், தன் குறைகளை மற்றவர்கள் மேல் புகுத்தி, அடுத்தவர்களையும், பொருட்களையும் சேதப்படுத்துதல் ஆகியவற்றை சொல்லலாம்.

அவற்றை கண்டுபிடித்து, ஆசிரியர், பெற்றோர் ஒருங்கிணைப்புடன், மாணவர்களை நல்வழிபடுத்தி, நல்ல சமூகத்தை உருவாக்க வேண்டும் என்கிறார், பேபி தேவகி.

மாணவியரும், ஆசிரியர்களும், "எங்களுக்கு நிறைய ஆலோசனைகள் தேவைப்படுகின்றன. ஆனால், ஆலோசனை வழங்க ஆட்கள் தான் மிக குறைவாக இருக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்" என்கின்றனர்.

No comments: