Monday, May 19, 2014

hot news

மொட்டை மாடியில் வெப்பத்தை தணிக்கும் நுட்பம்







கோடைக்காலத்தில் அக்னி வெயிலின் உக்கிரம் அனலாக கொட்டும் காலகட்டம் தொடங்கி விட்டது. வீட்டுக்குள் அதன் தாக்கம் எதிரொலிக்கும் என்பதால் அதற்கு ஏற்ப மின்சாதனங்களின் தேவை அதிகமாக இருக்கும். எனினும் அறைக்குள் அனலின் தாக்கம் வெளிப்படுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.
வெப்ப தாக்கம்
அதை தடுப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றி அறைக்குள் வெப்பச்சூழலை குறைக்கலாம். பொதுவாக வீட்டுக்குள் மேல்கூரையின் வழியாகவே வெப்பம் அதிகமாக உமிழப்படும். அதிலும் இரவு வேளைகளில் அதன் பாதிப்பு அதிகம் வெளிப்படும். அதை குறைப்பதற்கு மேல்கூரை பகுதியில் தேவையான மாற்றங்களை செய்வது அவசியமாகிறது.
 தற்போது மேல்கூரை வழியாக அதிக வெப்பம் உள் நுழைவதை தடுக்கும் வகையில் டைல்ஸ்கள் வந்து விட்டன. அவை புதிதாக கட்டப்படும் கட்டிடங்களின் மேல் தளங்களில் போடப்படுகின்றன. பழமையான கட்டிடங்களின் மேல்தளங்களில் இத்தகைய டைல்ஸ்களை மாற்ற முடியாத நிலையில் ஒருவகை பெயிண்டு கரைசலை பயன்படுத்தலாம். அவை மொட்டை மாடியின் வழியாக அதிக அளவில் வெப்பம் உள்நுழைவதை தடுக்கும் தன்மை கொண்டவை.
வெப்பம் உள்நுழைவதை தடுக்கலாம்
‘ஹீட் ரூப் கோட்டிங்’ எனப்படும் இக்கலவையை மொட்டை மாடி தளங்களில் பிரசை கொண்டு பூச வேண்டும். அதற்கு முதலில் மாடியின் தளப்பகுதியை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அதில் தூசி, அழுக்கு படியாத வகையில் நன்றாக தண்ணீர் விட்டு கழுவி தரையை உலர்த்த வேண்டும். தரையில் விரிசல் ஏற்பட்டு இருந்தால் அதையும் சரி செய்ய வேண்டும்.
பின்னர் ஹீட் ரூப்பிங் கலவையை தரைத்தளத்தின் மேல் பகுதியில் பிரஷ்ஷால் பூச வேண்டும். இந்த வேலையை மாலை வேளைகளில் மேற்கொள்வது பலனளிக்கும். இக்கரைசல் வெள்ளை நிறத்தில் இருப்பதால் தரை அதிகம் சூடாவது தடுக்கப்படுகிறது. இம்முறையை பயன்படுத்தி மேல்தளத்தில் பூச்சு மேற்கொள்வதன் மூலம் சுமார் 70 சதவீதத்துக்கும் மேலாக வெப்ப தாக்கம் குறையும்.
மிதமான சூழலை எதிர்பார்க்கலாம்
மேலும் அதிகமான குளிர்ச்சியை தக்கவைத்துக்கொள்ள ‘ஹீட் ஷீல்டு’ என்ற கோட்டிங்கை பூசலாம். இந்த பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கரைசலை மேல்தளத்தில் அடர்த்தியாக பூச வேண்டும். அது வெப்பம் உள்   நுழைவதை தடுத்து திருப்பி அனுப்பும் தன்மை கொண்டது என்பதால் அறைக்குள் அதிக அனல் நுழைவது குறைந்து மிதமான சூழல் நிலவ வழிவகை பிறக்கும். இதுபோன்ற பல நுட்பமான கோட்டிங் முறைகளும் இருக்கின்றன.
 அவற்றை பயன்படுத்தி அறைக்குள் வெப்பம் அதிகமாக உள் இறங்குவதை தடுத்து நிறுத்தலாம். பல நிறுவனங்கள் இந்த ‘ஹீட் ரூப்பிங்’ கலவையை ரெடிமேடாக தயாரித்து விற்பனை செய்கின்றன. அதனால் மொட்டை மாடியின் மேல் தளத்தில் இக்கலவையை பூசுவது சிரமமான காரியமாக இருக்காது.
கரைசலின் அடர்த்தி தன்மை
இக்கலவையை எப்படி பூச வேண்டும் என்பது பற்றிய சில நுட்பமான விஷயங்களை தெரிந்து கொண்டால் போதும். இப்பூச்சு வேலையை எளிதாக மேற்கொள்ளலாம். மொட்டை மாடியின் மேல் தள அளவை கணக்கிட்டு இக்கலவையை வாங்க வேண்டும். ஒரு லிட்டர் கலவையை கொண்டு சுமார் 50 சதுர அடி வரையில் பூசலாம். ஆகவே முதலில் மொட்டை மாடி தளத்தின் சதுர அடி பரப்பை துல்லியமாக அளவிட வேண்டும். அதற்கு ஏற்ப இக்கரைசலை வாங்கி பயன்படுத்துவது செலவை குறைக்கும். மேலும் இக்கரைசலை தரைத்தளத்தில் பூசும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
 கரைசல் எவ்வளவு அடர்த்தியாக இருக்கிறதோ அதற்கு ஏற்பவே பலனை எதிர்பார்க்க முடியும். ஆகையால் கரைசல் தண்ணீர் போன்று இல்லாமல் அடர்த்தியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தரைத்தளத்திலும் இடைவெளி இல்லாமல் பூச வேண்டும். அதிலும் அங்கு போடப்பட்டிருக்கும் செங்கல்களின் இணைப்பு பகுதிகளில் நன்றாக பூச வேண்டும். அப்போது தான் அந்த இடைவெளி வழியாக வெப்பம் உள் நுழைவது தடுக்கப்படும். அதை கவனிக்காமல் விட்டால் பூச்சு வேலைப்பாடு பலன் அளிக்காமல் போய்விடும். எனவே கரைசல் பூச்சு வேலையின்போது கவனமாக செயல்பட வேண்டும்.

No comments: