Saturday, November 30, 2013

PallikudamNEWS

திறந்தநிலை பட்டங்கள் நிலை: மீண்டும் தெளிவுபடுத்திய யு.ஜி.சி.,

              தொலை தூர கல்வி மற்றும் திறந்த நிலை கல்வி முறையில் பெற்ற பட்டங்கள், ரெகுலர் முறையில் கல்லூரிகளில் படித்து பெறும் பட்டங்களுக்கு சமமானது என, யு.ஜி.சி., மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது.
          நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்கள், தொலை தூர கல்வி, திறந்த நிலை கல்வி முறைகளில் பட்டங்களை வழங்கி வருகின்றன. அடிப்படை கல்வி முடித்தவர்களும், இந்த முறைகளில் பயின்று பட்டதாரியாக உயர்த்துள்ளனர். இதில், பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களும் இடம் பெற்றுள்ளனர். திறந்த நிலை மற்றும் தொலை தூர கல்வி முறையில் பட்டங்களை பெற்று பணியாற்றுவோர், தாங்கள் பட்டதாரிகள் என்பதால், உரிய பதவி உயர்வு வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
           ஆனால், இவ்வகையில் பெற்ற பட்டங்கள், ரெகுலர் முறையில் பெற்ற பட்டங்களுக்கு சமமானது அல்ல என, தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, இவ்வகை பட்டம் பெற்றவர்கள் பாதிக்கப்பட்டனர்.
            இந்நிலையில், இவ்வகை பட்டங்கள் ரெகுலர் முறைக்கு சமமானது என, யு.ஜி.சி., தெளிவுபடுத்திஉள்ளது. இதுகுறித்து, நாடெங்கிலும் உள்ள மத்திய பல்கலைக் கழகங்கள், மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைகளுக்கு, யு.ஜி.சி. அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
              பல்கலைக்கழகங்கள் திறந்த நிலை மற்றும் தொலை தூர கல்வி முறைகளில் பட்டம், பட்டய படிப்புகளை நடத்தி, அதற்கான சான்றுகளை வழங்கியுள்ளன. இவ்வகை பட்டங்கள் ரெகுலர் முறையில் பெறப்படும் பட்டங்களுக்கு சமமானவை என யு.ஜி.சி., ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.
               சில இடங்களில் இது குறித்த சர்ச்சை நீடிப்பதால், இவ்வகை பட்டங்கள் ரெகுலர் முறைக்கு சமமான பட்டங்களே என, மீண்டும் அறிவிக்கப்படுகிறது. அவர்கள் பெற்ற பட்டங்களும் அங்கீகரிக்கப்படும் என, அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: