Tuesday, November 12, 2013

PallikudamNEWS

13,500 மக்கள் நலப்பணியாளர்களின் டிஸ்மிஸ் ஆர்டர் ரத்து

               மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேரை பணி நீக்கம் செய்தது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது. 
           உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்ததுடன், வழக்கை மீண்டும் விசாரித்து, ஆறு மாதத்தில் தீர்ப்பளிக்கும் படியும் அதிரடி உத்தரவு போட்டுள்ளது. வழக்கில் இரு தரப்பினரும் வாய்தா கேட்டு காலதாமதம் செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளது.  
           தமிழகத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேர் கடந்த 1989ம் ஆண்டு திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டனர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதை எதிர்த்து மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதை நீதிபதி சுகுணா விசாரித்து, மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டார். 
           அதை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் விசாரித்தது. விசாரணைக்கு பின்னர், மக்கள் நலப்பணியாளர்களுக்கு 5 மாத சம்பளத்தை நிவாரணமாக அளித்து, அவர்களை பணி நீக்கம் செய்யலாம் என்று தீர்ப்பு அளித்தது. பணி வழங்கக் கோரிய மக்கள் நலப்பணியாளர்களின்வழக்கையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி மக்கள்நலப் பணியாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் மதிவாணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் ஜெயின், மதன்லோக் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, ‘கடந்த 1989ம் ஆண்டு திமுக ஆட்சியில் பணியில் சேர்ந்த 13 ஆயிரத்து 500 மக்கள்நல பணியாளர்கள், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
              இதுபோல 3 முறை இப்படி திமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களை நியமிப்பதும், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களை நீக்குவதுமாக தொடர்ந்து நடந்துள்ளது. அவர்களை கால்பந்து என்று கருதி அரசு விளையாடியிருக்கிறது. எனவே மக்கள்நல பணியாளர்கள் 13 ஆயிரத்து 500  பேர் பணி நீக்கம் செய்யப்பட்டது ஏன் என்று தமிழக அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.இந்த  வழக்கு கடந்த ஒரு ஆண்டாக நிலுவையில் இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் அனில்தவே, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய  டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், ‘மக்கள் நலப்பணியாளர்களை பணி நீக்கம் செய்த உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்கிறோம். உயர் நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும். 6 மாதத்தில் விசாரணையை முடித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று அதிரடியாக தீர்ப்பளித்தனர். 
                மேலும், அவர்கள் கூறுகையில், ‘மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பழனியப்பன் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, அவர் 5 மாதம் சம்பளம் கொடுத்தால் போதும் என்று கூறியதை ஏற்று உத்தரவிடப்பட்டுள்ளது சரியான நடைமுறையாகாது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை டிவிஷன் பெஞ்ச் ஏற்க மறுத்ததும் தவறானது. பல ஆண்டுகளாக பணியாற்றிய மக்கள் நலப் பணியாளர்களை தமிழக அரசு பணி நீக்கம் செய்தது தவறானது. அவர்கள் வாழ்க்கையை அரசு விளையாட்டாக கருதியுள்ளது என்றும் தெரிவித்தனர். எனவே, ஐகோர்ட்டில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும். 6 மாத விசாரணைக் காலத்தில் அரசுத் தரப்பும், மக்கள் நலப் பணியாளர்கள் தரப்பிலும் வாய்தா கோரி வழக்கில் காலதாமதத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர்.
முக்கிய திருப்பங்கள்... * மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேர் 1989ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். *அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் அனைவருக்கும் பணி நிறுத்தம் செய்யப்பட்டது.  *3 முறை இப்படி அவர்கள் நியமிக்கப்படுவதும், நீக்கப்படுவதும் நிகழ்ந்தது.  *உயர் நீதிமன்ற தனி நீதிபதி பெஞ்ச் விசாரித்து, மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டது.  *ஆனால், டிவிஷன் பெஞ்ச் விசாரணையில் அப்பீல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.  *5 மாத சம்பளம் நிவாரணமாக அளித்து டிஸ்மிஸ் செய்யலாம் என்று கூறி தீர்ப்பு வந்தது.  *இதை எதிர்த்த அப்பீல் மனு மீது தான் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு போட்டுள்ளது.  *மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கில் முக்கிய திருப்பம் இது.  *இவர்கள் பணி நீக்க வழக்கு மீண்டும் உயர் நீதிமன்றத்தில் விசாரணை துவங்கும்.  *6 மாதத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

No comments: