அரசு பள்ளிகளில் ஆலோசனை பெட்டி
அரசு பள்ளிகளில் ஆலோசனை பெட்டி: மாணவர்களிடம் வரவேற்பு பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள ஆலோசனை பெட்டிக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2013-14ம் கல்வி ஆண்டில் ஆலோசனை பெட்டி வைக்குமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 113 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் 89 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஆலோசனை பெட்டி வைக்கப்பட்டது.
இது குறித்து சி.இ.ஓ., மகேஸ்வரி கூறியது: "பள்ளிகல்வித்துறையின் உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும், ஆலோசனை பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, ஆலோசனை பெட்டிகளில் உள்ள கடிதங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் எடுத்து படித்து வருகின்றனர்.
இதில், மாணவர்களுக்கு எந்த பாடத்தில் ஆசிரியர்கள் கூடுதல் அக்கரை செலுத்த வேண்டும். பள்ளிக்கு வந்து செல்லும் வழியில் தங்களுக்கு உள்ள பிரச்னைகள் குறித்து எழுதிய அனைத்து கடிதங்களுக்கும் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால், மாணவர்கள் மத்தியில் ஆலோசனை பெட்டிக்கு நல்ல வேற்பு ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் இந்தாண்டு மாணவர்களின் தேர்ச்சி அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் ஏதேனும் மாணவிகளுக்கு குழந்தை திருமண முயற்சி நடந்தால் அதை தடுக்க தேவையான ஆலோசனைகளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கல்வி வளர்ச்சி நாளில் மாவட்டத்தில் சிறந்த துவக்கப்பள்ளியாக பென்னாகரம் தாலுகா ஏர்பட்டி அரசு துவக்கபள்ளியும், சிறந்த அரசு நடுநிலைப் பள்ளியாக பாலக்கோடு தாலுகா நல்லாம்பட்டி நடுநிலைப்பள்ளியும், சிறந்த உயர்ந்த நிலைப்பள்ளியாக தர்மபுரி தாலுகா இலக்கியம்பட்டி அரசு உயர் நிலைப்பள்ளியும், சிறந்த மேல்நிலைப்பள்ளியாக பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா மூக்காரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை கலெக்டர் விவேகானந்தன் தலைமையிலான குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இதில் சிறந்த துவக்கப்பள்ளிக்கு 25 ஆயிரம் ரூபாய், நடுநிலைப்பள்ளிக்கு 50 ஆயிரம் ரூபாய், உயர்நிலைப்பள்ளிக்கு 75 ஆயிரம் ரூபாய், மேல்நிலைப்பள்ளிக்கு தர்மபுரியில் வரும் 16ம் தேதி நடக்கவுள்ள அறிவியல் கண்காட்சியில் பரிசு தொகை வழங்கப்படவுள்ளது. இத்தொகையை பள்ளி வளர்ச்சி பணிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்." இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment