Saturday, November 8, 2014

PG TRB

1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான அறிவிப்பாணை வெளியீடு
            தமிழகம் முழுவதும் 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள்  நியமனத்துக்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

             இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 10 முதல் 26 வரை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் விநியோகம் செய்யப்படும். ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும்.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணை விவரம்:

தமிழ்ப் பாடத்தில் 277 பேர்,
ஆங்கிலப் பாடத்தில் 209 பேர்,
கணிதப் பாடத்தில் 222 பேர்,
இயற்பியல், வேதியியலில் தலா 189 பேர்,
உயிரியலில் 95 பேர்,
விலங்கியலில் 89 பேர்,
வரலாறு பாடத்தில் 1989 பேர்,
பொருளாதாரத்தில் 177 பேர்,
வணிகவியலில் 135 பேர்,
உடற்கல்வி இயக்குநர்களாக 27 பேர்

என மொத்தம் 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வித் தகுதி:

சம்பந்தப்பட்ட பாடத்தில் எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம். படிப்போடு, பி.எட். பட்டமும் பெற்றிருக்க வேண்டும். இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் ஒரே பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் ஒரு ஆண்டுப் பட்டப் படிப்பை முடித்திருந்தாலோ, ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் அதிகமான படிப்புகளைப் படித்திருந்தாலோ அவர் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது.

எனினும், வேறு பிரிவில் பட்டம் பெற்றுள்ள மாணவர்கள் அவர்களது படிப்பு, அறிவிப்பாணையில் உள்ள பாடங்களுக்கு இணையானது என்ற சான்றிதழ் பெற்றிருந்தால் போட்டித் தேர்வு எழுதலாம். இந்த அறிவிப்பாணை வெளியாவதற்கு முன்பே இணையானது என்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் எந்த இடத்தில் விண்ணப்பத்தை வாங்கினாரோ அதே இடத்தில் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

மொத்தம் 150 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தப்படும். பிரதான பாடம், கல்வி முறை, பொது அறிவு ஆகியவை தொடர்பாக 150 கேள்விகள் கேட்கப்படும். இந்தத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர்.

பதிவு மூப்புக்கு 4 மதிப்பெண்:

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்புக்காக மொத்தம் 4 தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் வரை வழங்கப்படும். ஒராண்டு முதல் மூன்றாண்டு வரை 1 மதிப்பெண், 3 முதல் 5 ஆண்டுகள் வரை 2 மதிப்பெண், 5 முதல் 10 ஆண்டுகள் வரை 3 மதிப்பெண், 10 ஆண்டுகளுக்கு மேல் 4 மதிப்பெண் என வழங்கப்படும்.

பணி அனுபவத்துக்கு 3 மதிப்பெண்:

அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளுக்கு ஆசிரியர்களாகப் பணியாற்றியிருந்தால் பணி அனுபவத்துக்கு 3 தகுதிகாண் மதிப்பெண் வரை வழங்கப்படும்.

1 முதல் 2 ஆண்டுகள் வரை பணி அனுபவத்துக்கு 1 மதிப்பெண்ணும், 2 முதல் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவத்துக்கு 2 மதிப்பெண்ணும், 5 ஆண்டுகளுக்கு மேல் 3 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.

சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

No comments: