அரையாண்டு தேர்வு விடுமுறையில் மாற்றம் !
பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் அதிரடி
பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளில், அரையாண்டு விடுமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதுச்சேரியில், 433 அரசு பள்ளிகளும், 270 தனியார் பள்ளிகளும் செயல்படுகின்றன. தனியார் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகளை நடத்தி, விடுமுறை விடுவதற்கும், அரசு பள்ளிகளில் தேர்வு முடிந்து, விடுமுறை அறிவிப்பதற்கும், பெரும் வித்தியாசம் இருந்து வந்தது.
குறிப்பாக, அரையாண்டு தேர்வை பொருத்தவரை, டிசம்பர் மூன்றாவது வாரத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக, தேர்வை முடித்து, விடுமுறை அறிவிப்பது, பெரும்பாலான தனியார் பள்ளிகளில் வழக்கமாக உள்ளது. அரையாண்டு விடுமுறைக்கு பின், ஜனவரி முதல் வாரத்தில், தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். அரசு பள்ளிகளில், டிசம்பர் கடைசியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில்தான், அரையாண்டு தேர்வு துவங்கும். பின், விடுமுறை அளிக்கப்பட்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் முடிந்து, 19ம் தேதிக்கு பிறகே, அரசு பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம்.
பொதுத் தேர்வுக்கு தயாராகும், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜனவரி மாதம் என்பது மிக முக்கியமான காலக்கட்டமாகும். ஏனென்றால், பொதுத் தேர்வு துவங்குவதற்கு ஓரிரு மாதங்களே இருக்கும் சூழ்நிலையில், ஜனவரி மாதத்தில் பள்ளிகள் இயங்கினால்தான், பாடங்களை மீள்பார்வை செய்ய முடியும்; ரிவிஷன் தேர்வுகளை நல்ல முறையில் எழுத முடியும்.
எனவே, அரசு பள்ளிகளில் படிக்கின்ற மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு, தேர்வு அட்டவணை, விடுமுறை போன்றவற்றை, பள்ளிக் கல்வித் துறை உயரதிகாரிகள் அதிரடியாக மாற்றி அமைத்துள்ளனர்.
இதன்படி, காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, கடந்த அக்டோபர் 3ம் தேதியன்று, தனியார் பள்ளிகளை போலவே, அரசு பள்ளிகளும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக, அரையாண்டு தேர்வு மற்றும் விடுமுறையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது.
அரசு பள்ளிகளில், அரையாண்டு தேர்வு, டிசம்பர் இரண்டாவது, மூன்றாவது வாரங்களில் நடத்தி முடிக்கப்படும். டிசம்பர் நான்காவது வாரத்தில், அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டு, ஜனவரி 2ம் தேதியன்று, அரசு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளின் நடவடிக்கை, பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment