பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்.
புகழ்பெற்ற எழுத்தாளர் பாலகுமாரன். இவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 71.
எழுத்தாளர் பாலகுமாரன்
எழுத்தாளர் பாலகுமாரன், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி வட்டத்தில் உள்ள பழமார்நேரியில் 1946-ல் ஜூலை 5-ம் தேதி பிறந்தார். இவரின் தந்தை தமிழாசிரியர். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர், தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று, தனியார் நிறுவனத்தில் 1969-ம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றினார். அப்போது, கவிதைகள் எழுதத் தொடங்கினார். அதில் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர், அதிகாரி என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காகத் தன் வேலையைத் துறந்தார்.
இவர், 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இயக்குநர்கள் பாலசந்தரிடம் மூன்று திரைப்படங்களிலும் கே.பாக்யராஜிடம் சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர், 'இது நம்ம ஆளு' என்னும் திரைப்படத்தை கே.பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.
இவர் எழுதிய 'மெர்க்குரி பூக்கள்', 'இரும்புக் குதிரைகள்' என்ற நாவல்கள் புகழ்பெற்றவை. ரஜினி நடித்த 'பாட்ஷா' படத்தில், ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி என்ற வசனம், பாலகுமாரன் எழுதியது. 'நாயகன்', 'குணா', 'ஜென்டில்மேன்' உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். பாலகுமாரனின் மறைவு, திரைத்துறைக்கும் எழுத்துலகுக்கும் பெரும் இழப்பு.
No comments:
Post a Comment