அனைத்து வகை அரசு பள்ளிகளை ஒரே நிர்வாகத்திற்கு மாற்ற உத்தரவு
தமிழகத்தில், 18 வகை நிர்வாகங்களின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளை ஒருங்கிணைத்து, ஒரே நிர்வாக முறையில் கொண்டு வர, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், 8,400 அரசு உதவிபெறும் பள்ளிகள் உட்பட, 40 ஆயிரம் பள்ளிகள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.
மற்ற பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக் என, தனியார் பள்ளிகளாக, தனி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பள்ளிகளில், மாநிலம் முழுவதும், 5.60 லட்சம் பேர் படிக்கின்றனர். அரசு பள்ளிகளை பொறுத்த வரை, அரசின் பல்வேறு துறைகள் மூலம் நிர்வாகம் செய்யப்படுகிறது.
அதாவது, பள்ளிக்கல்வித் துறை, நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்துகளுக்கான ஊரக வளர்ச்சித் துறை, கள்ளர் மறுசீரமைப்பு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை, வனத்துறை, சமூகநலத் துறை, பழங்குடியினர் நலத்துறை மற்றும் கன்டோன்மென்ட் என, பல்வேறு துறைகளின் நிர்வாகத்தில் செயல்படுகின்றன.
மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் நியமனம், உள்கட்டமைப்பு மேம்பாடு, பள்ளி நிர்வாகம் போன்றவற்றில், பல்வேறு விதிகள் தனித்தனியாக வகுக்கப்படுகின்றன. அதனால், பள்ளிகளின் திட்டங்களை வகுப்பதிலும், ஒழுங்குமுறை செய்வதிலும், பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன.
இது குறித்து, தமிழக பள்ளிக்கல்வியின் ஆண்டறிக்கையை ஆய்வு செய்த மத்திய அரசு, குளறுபடிகளை கண்டறிந்துள்ளது. இதை தொடர்ந்து, அனைத்து நிர்வாகங்களையும், ஒரே குடையின் கீழ் வரும் வகையில் ஒன்றிணைக்க வேண்டும். இதில், தாமதம் ஏற்படக் கூடாது என, தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment