Wednesday, June 7, 2017

Pallikudam

கலை, அறிவியல் படிப்புகளுக்குவிண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு.
கடந்த ஆண்டுகளைப் போலவே கலை அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிபோரின் எண்ணிக்கை, 2017-18 கல்வியாண்டிலும் அதிகரித்துள்ளது.

வழக்கம்போல வணிகவியல் படிப்புக்கே அதிகமானோர் விண்ணப்பித்திருப்பதாகவும், அதற்கு அடுத்தப்படியாக அடிப்படை அறிவியல் படிப்புகளுக்கு அதிக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் பல்வேறு கல்லூரி முதல்வர்கள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மே 12-ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஒரு சில கல்லூரிகள் அதற்கு முன்னதாகவே விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்கின.

அதிக மதிப்பெண் பெறும் சிறந்த மாணவர்களையும் கவரும் வகையில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல், அரசு கல்லூரிகளிலும் முன்கூட்டியே விண்ணப்ப விநியோகமும், மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வும் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான அரசு கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகமும், பூர்ததி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் கால அவகாசமும் வியாழக்கிழமையுடன் (மே 25) முடிவடைந்தது. சில அரசு கல்லூரிகள் மே 27-ஆம் தேதி வரையிலும் அவகாசம் அளித்துள்ளன.
இந்த நிலையில், வியாழக்கிழமை (மே 26) வரையிலான நிலவரப்படி, கலை அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டுகளைப் போலவே அதிகமாக விநியோகமாகியிருப்பது தெரியவந்துள்ளது.

மொத்தம் 1,100 இடங்களைக் கொண்ட சென்னை காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் 11,000 விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளன. இவர்களில் வியாழக்கிழமை வரை 8,700 பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். இதில் பி.காம். படிப்புக்கு மட்டும் 3000 பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ள அக்கல்லூரி முதல்வர் ராதா கூறினார்.
அதுபோல சென்னை மாநிலக் கல்லூரியில் 10,000 விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளன. இது கடந்த ஆண்டுகளை விட அதிகம் எனவும், குறிப்பாக பி.காம்., பி.எஸ்சி. கணிதம் மற்றும் அடிப்படை அறிவியல் படிப்புகளுக்கு அதிக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக அக் கல்லூரி முதல்வர் பிரேமானந்த பெருமாள் கூறினார்.

இதுபோல சென்னை ராணி மேரிக் கல்லூரி, மயிலாடுதுரை மணல்மேடு அரசுக் கல்லூரி, ஒசூர், சிவகாசி என அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் பன்மடங்கு உயர்ந்திருப்பதாக கல்லூரி நிரிவாகிகள் தெரிவிக்கின்றனர். கலை, அறிவியல் படிப்புகள் மீது மாணவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், இடங்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும் என கல்லூரி முதல்வர்கள் வலியுறுத்துகின்றனர்.

அரசாணை இருந்தும் பயனில்லை: இதுகுறித்து சென்னை ராணி மேரிக் கல்லூரி மூத்த நிர்வாக ஒருவர் கூறியது:
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருவதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதியன்று அரசாணை (அரசாணை எண். 86) ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது.

அதில், அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில், விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகமுள்ள நிலையில் அடிப்படை அறிவியல் பாடப் பிரிவுகளில் மாணவர்கள் எண்ணிக்கையை 60 இடங்கள் என்ற அளவிலும், கலை சார்ந்த பாடப் பிரிவுகளில் 100 இடங்கள் என்ற அளவிலும் உயர்த்திக் கொள்ளலாம் என அதில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், இந்த ஆணைப்படி இடங்களை உயர்த்திக்கொள்ள கல்லூரி கல்வி இயக்குநரிடம் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட இணைப்புப் பல்கலைக்கழகத்திடமும் கல்லூரிகள் அனுமதி பெறவேண்டியச் சூழல் உள்ளது.

இதில், இயக்குநர் உடனே அனுமதியளித்தாலும், பல்கலைக்கழக அனுமதிக்காக பல நாள்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. சில பல்கலைக்கழகங்கள் பல்வேறு காரணங்களைக் கூறி அனுமதி மறுக்கின்றனர். இதனால், அரசுக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் ஏழை மாணவர்கள், வேறு வழியின்றி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகளை நாடிச் செல்ல வேண்டியச் சூழல் ஏற்படுகிறது. எனவே, இதற்கு உரிய தீர்வை அரசு காண வேண்டும் என்றார்.

இதே கருத்தை மயிலாடுதுரை மணல்மேடு அரசுக் கல்லூரி முதல்வர் சிவராமன் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினர்.

இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர் மஞ்சுளா கூறியது: இந்த அரசாணைப்படி இடங்களின் எண்ணிக்கையை உயர்த்திக்கொள்ள இயக்குநர் அலுவலகத்திலும், சம்மந்தப்பட்ட இணைப்புப் பல்கலைக்கழகத்திடமும் கல்லூரிகள் அனுமதி பெற வேண்டும் என்பது கட்டாயம். அதை மாற்ற இயலாது.
கல்லூரிகள்தான் இதற்கான விண்ணப்பத்தை விரைவாக சமர்ப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

No comments: