Saturday, January 9, 2016

Pallikudamnews

எஸ்சி, எஸ்டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு தொடர்பான தீர்ப்பில் பிழை: ஒப்புக்கொண்டது உச்ச நீதிமன்றம்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின (எஸ்சி, எஸ்டி) பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்களின் பதவி உயர்வு தொடர்பாக ஓராண்டுக்கு முன்னர் அளிக்கப்பட்ட தீர்ப்பில் பிழை உள்ளதை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது."எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்குவதை அரசியல் சாசனம் அனுமதிக்கிறது.

ஆனால், இது தொடர்பாக அரசுக்கு நீதிமன்றங்கள் உத்தரவிட முடியாது'என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி அளித்த தீர்ப்பு ஒன்றில் தெரிவித்திருந்தது.எனினும், இந்தத் தீர்ப்பில் ஒரு பிழை இருப்பதாகவும், அதை சரிசெய்யுமாறும் கோரி சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா உள்பட பல்வேறு வங்கிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெ.செலமேஸ்வர் மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். அவர் கூறியதாவது:வங்கிகளில் குரூப்-ஏ பணியிடங்களில் மாதம் ஒன்றுக்கு ரூ.5,700 வரை ஊதியம் பெறும் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்தஊழியர்களுக்கு பதவி உயர்விலும் இடஒதுக்கீடு பெற முடியும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் ஒரு பத்தியில் கூறப்பட்டுள்ளது.எனினும், அதற்கு அடுத்த பத்தியில் அதற்கு முரணான வாசகம் இடம்பெற்றுள்ளது. அதாவது, "குரூப்-ஏ பணியிடங்களில் மாதம் ஒன்றுக்கு ரூ.5,700 வரை ஊதியம் பெறும் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு கிடையாது; சலுகைகள் மட்டுமே உண்டு' என்று கூறப்பட்டுள்ளது. தீர்ப்பைச் செயல்படுத்துவது தொடர்பான உத்தரவைக் கொண்டிருக்க வேண்டிய இந்தப் பத்தியில் இவ்வாறு தவறான வாசகம் உள்ளது. இந்த வாசகத்தை நீக்க நீதிபதிகள் உத்தரவிட வேண்டும் என்று ரோத்தகி வாதிட்டார்.இந்நிலையில், மறு ஆய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது.
அப்போது, அட்டர்னி ஜெனரலின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள், கடந்த ஆண்டு அளித்த தீர்ப்பில் பிழை இருப்பதை ஒப்புக் கொண்டனர். தீர்ப்பில் பிழையான வாசகம் அடங்கிய சம்பந்தப்பட்ட பத்தியை நீக்குமாறும் உத்தரவிட்டனர். மேலும், இந்தப் பிழை காரணமாக எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டிருந்தால் அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடி நியாயம் பெறலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

No comments: