Tuesday, June 9, 2015

pallikudam

கண்ணியமான ஆடைகளை அணிவது அவசியம்: ஆசிரியர்களுக்கு உத்தரவு.

          பள்ளி வளாகத்துக்குள், வரும் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் பண்பாட்டுக்கும், கலாசாரத்துக்கும் ஏற்ற ஆடைகளை கண்ணியமாக அணிந்துவரவேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 
 
         கல்வியாண்டு துவங்கி வகுப்புகள் நடந்துவரும் சூழலில், மாணவர்களின் பாதுகாப்பு, கல்வித்தர மேம்பாடு குறித்து பல்வேறு உத்தரவுகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில், பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழ வேண்டிய ஆசிரியர்களும், தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, பள்ளி வளாகத்துக்குள் கண்ணியமான ஆடைகளை அணியவேண்டும். மாணவ, மாணவிகளிடம் ஒழுக்கக் கேடான முறையில் நடந்துகொள்ளும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதை, தலைமையாசிரியர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் அடிக்கடி விடுப்பு எடுப்பதை தவிர்க்கவேண்டும்; தலைமையாசிரியர்கள் உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று விடுப்பு எடுப்பது அவசியம். விடுப்பில் செல்லும்போது உதவி தலைமை ஆசிரியர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்கவேண்டும். வேலை நேரத்தில், வகுப்பை விட்டு வெளியிடங்களுக்கு செல்லக்கூடாது என்றும் மொபைல்போன் பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக, அரசையோ, அரசு சார்ந்த அதிகாரிகளையோ தேவையற்ற விமர்சனம் செய்வது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடத்தை விதி, 12ல் நடவடிக்கை எடுக்கப்படும். வருகைபதிவேடு உட்பட அனைத்து தபால்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பம் இடவேண்டும் என கூறப்பட்டுள்ளது.கோவை மாவட்ட பள்ளிகளில், இதுகுறித்த சுற்றறிக்கை தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பள்ளி ஆசிரியர்கள் கூட்டத்தில் அறிவுறுத்த உத்தரவிடபட்டுள்ளது.

No comments: