Monday, December 1, 2014

Pallikudam

மாணவர்களை குறை கூறுவதை விடுத்து, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் திறம்பட பணியாற்ற கல்வித்துறை உத்தரவு.
           தமிழகத்தில், மாணவ, மாணவியரை குறைகூறுவதை விடுத்து, அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் திறம்பட பணியாற்ற வேண்டும் என, பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

          தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் கல்வித் தரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், அரசுப் பள்ளி மாணவ, மாணவியரின் கல்வித் தரத்தில் குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்படவில்லை என்ற புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன. சில மாதங்களுக்கு முன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செயலர், இயக்குநர் ஆகியோர், மாநிலம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி, ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் 80 சதவீத ஆசிரியர்கள் கல்வி போதிப்பதில் முழு ஈடுபாடு காட்டுவதில்லை. மாணவர்களை குறைகூறி தங்களது கடமையிலிருந்து தவறி வருவதாகவும், இதன் தாக்கம் 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில் கடுமையாக எதிரொலிப்பதாகவும் தெரியவந்தது. மேலும், பாடங்களை மனனம் செய்வதால், மாணவர்கள் உயர் கல்விக்குச் செல்லும்போது தடுமாறுவதாகவும், கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது.இதைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவ, மாணவியரின் கல்வித் தரத்தை மேம்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னையில் கடந்த வாரம் நடைபெற்றது. அதில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கல்வித் துறை இணை இயக்குநர்கள், கல்வித் துறை உயர்அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், மாணவ, மாணவியர்களுக்கு 6, 7, 8ஆம் வகுப்புகளில் இருந்தே கல்வி கற்பிப்பதில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆங்கிலம், கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் முழு ஈடுபாட்டுடன், அறிவுப்பூர்வமாக கற்கச் செய்துவிட்டால், உயர் கல்வியில் மாணவர்களின் தடுமாற்றங்களை அறவே தடுக்க முடியும். மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் கல்வி கற்பதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை ஆசிரியர்களைச் சார்ந்தது. மாவட்டந்தோறும் 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளுக்கு மாணவ, மாணவியரை தயார்படுத்த, 6, 7, 8ஆம் வகுப்புகளிலேயே போதிய பயிற்சிகளை வழங்கி, முன்னேற்பாடுகளை செய்யவேண்டும். இதற்கு, அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த, மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகளை, அரசு பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளதாக, கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments: