Monday, July 9, 2018

Pallikudam

ஒரு நாளைக்கு 24 அல்ல... 25 மணி நேரமாம்!

வெ .ஜெயசுப்பிரமணியன்
``தலைக்கு மேல வேலை.. ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான்ல?" என அங்கலாய்ப்பவர்களுக்கு பதிலாக வந்திருக்கிறது புதிய ஆய்வு முடிவு ஒன்று. வருங்காலத்தில் ஒருநாளுக்கு 25 மணி நேரமாகலாம் என்கிறது அந்த ஆய்வு.

பல பில்லியன் ஆண்டுகளாகப் பூமியில் நிலவும் நேர மாறுபாட்டிற்கும் நாள்கள் நீள்வதற்கும் காரணமாக நிலவு இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். நிலவுக்கும் பூமிக்கும் இடையேயுள்ள தொலைவு அதிகரிக்க அதிகரிக்கப் பூமியின் சுழற்சி வேகம் குறைகிறது. சொல்லப்போனால் கிட்டத்தட்ட 140 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தற்போது உள்ள தொலைவில் நிலவு இருக்கவில்லை என்றும், அப்போது ஒரு நாள் என்பது 18 மணி 41 நிமிடங்களைக் கொண்டிருந்ததாகவும் கூறுகிறது ஆய்வு. மேலும், ஒருநாளுக்கு 24 மணி நேரம் என்ற மணிக்கணக்கு, வருங்காலத்தில் அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் பேராசிரியர் ஸ்டீபன் மேயர்ஸ் மற்றும் அவரது குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுகுறித்த தகவல்கள் Proceedings of the National Academy of Sciences என்ற ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டது. பொதுவாக பூமியின் சுழற்சியானது, விண்வெளியிலுள்ள பல்வேறு பொருள்களின் ஈர்ப்புவிசையால் பாதிக்கப்படுகிறது. இதில் நிலவினைத் தவிர பிற கோள்களும் (planets) அடங்கும். இந்த அனைத்துப் பொருள்களும்தாம் பூமியின் சுழற்சி மாறுபாட்டினை நிர்ணயிக்கும் காரணிகளாக விளங்குகின்றன. சூரியக் குடும்பத்தில் காணப்படும் பல்வேறு பொருள்களின் இயக்கங்களால்தாம் கடந்த பல கோடி ஆண்டுகளுக்கும் மேலாக பூமியில் நாளொன்றின் நேர நிர்ணயமானது பல்வேறு மாறுதலுக்குள்ளாகி இருக்கிறது. இந்த விண்வெளி பொருள்களின் இயக்கங்களில் ஏற்படும் எந்தவொரு சிறிய மாற்றமும் பூமியின் காலநேர நிர்ணயத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கும். இந்நிலையில், தற்போது நிலவு பூமியிலிருந்து வருடத்துக்கு 3.82 சென்டி மீட்டர் என்ற அளவில் விலகிச்செல்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு இன்னும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. நிறைய உண்மைகள் வெளிவந்தால், புவியியல் வரலாற்றில் மற்றுமொரு மகத்தான ஆராய்ச்சியாக இது இருக்கவும் வாய்ப்புண்டு!

No comments: