எல்.இ.டி., பல்புகளால் தினமும் ரூ.2.71 கோடி மிச்சம், நாடு முழுதும் விரிவாக்க மத்திய அரசு திட்டம்
நாட்டின் பல மாநிலங்களில், எல்.இ.டி., மின் விளக்குகள் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மின்சாரத்தை தயாரிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்படும் செலவில், நாள்தோறும், 2.71 கோடி ரூபாய் மிச்சமாகிறது. தற்போது, 10க்கும் குறைவான மாநிலங்களில் பின்பற்றப்படும் இந்த திட்டத்தை, அனைத்து மாநிலங்களும் முழுமனதுடன் பின்பற்றத் துவங்கினால், காற்றின் மாசு குறைவதுடன், அரசின் மின் செலவும் கணிசமாக வீழ்ச்சி அடையும்.
எல்.இ.டி., என்பது, 'லைட் எமிட்டிங் டையோடு' என்ற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கம். குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தி அதிக ஒளியை, நீண்ட காலத்திற்கு வழங்கும் திறன் கொண்ட இந்த புதுமையான மின் விளக்குகள், சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாதவை. இந்த விளக்குகளை பயன்படுத்துபவர்களுக்கும், அரசுக்கும் பல விதங்களில் நன்மை கிடைப்பதால், எல்.இ.டி., விளக்குகளை அதிக அளவில் பயன்படுத்துவதற்கு, மத்திய அரசு ஊக்கம் அளிக்கிறது. மின்துறை சார்பில், இதற்கென சிறப்பு பிரிவை உருவாக்கி, வீடுகள் தோறும் விதவிதமான, எல்.இ.டி., விளக்குகளை பயன்படுத்த, பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மத்திய அரசின் தீவிர முயற்சியால், ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், குண்டு மின் விளக்குகள் மற்றும் சி.எப்.எல்., எனப்படும் பாதரசம் கொண்ட விளக்குகளின் பயன்பாடு, 90 சதவீதம் தவிர்க்கப்பட்டு, எல்.இ.டி., விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால், மின் நுகர்வோருக்கு மின் கட்டணமும் குறைவதால், பொதுமக்களும் ஆர்வமாக, எல்.இ.டி., விளக்குகளை வாங்கி, வீடுகளில் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றம்:
* ஜனவரி முதல், டி.இ.எல்.பி., எனப்படும், முழுவதும், எல்.இ.டி., விளக்குகளை பயன்படுத்தும் திட்டம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், டில்லி, உத்தர பிரதேசம், ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது
* அடுத்தகட்டமாக, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், கேரளா, சத்தீஸ்கர், ஜம்மு - காஷ்மீர், அசாம், சண்டிகர், கர்நாடகாவிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது
* இ.இ.எஸ்.எல்., எனப்படும், மத்திய மின்துறை யின் துணை அமைப்பு, எல்.இ.டி., மின் விளக்குகள் வினியோகத்தை மேற்கொள்கிறது
* இதுவரை, இரண்டு கோடி எல்.இ.டி., விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன
* நாட்டில், ஒவ்வொரு ஆண்டும் தயாரிக்கப்படும், 77 கோடி சாதாரண விளக்குகள், 40 கோடி, சி.எப்.எல்., விளக்குகளை அடியோடு நிறுத்திவிட்டு, அதிக அளவில், எல்.இ.டி., விளக்குகளை புழக்கத்தில் கொண்டு வருவது தான், இ.இ.எஸ்.எல்.,லின் இலக்கு.
எந்த வகையில் சிக்கனம்? சாதாரண குண்டு மின் விளக்கு, 350 - 400, 'லுமென்' வெளிச்சத்தை உமிழ, 60 வாட் மின்சாரத்தை எடுத்துக் கொள்கிறது. பாதரசத்தை மூலப்பொருளாக கொண்ட, சி.எப்.எல்., எனப்படும் விளக்குகள், 450 - 550 லுமென் திறன் வெளிச்சத்தை உமிழ, 14 - 16 வாட் மின்சாரத்தை எடுத்துக் கொள்கிறது. ஆனால், எல்.இ.டி., விளக்குகள், 6 வாட் மின்சாரத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு, 600 - 700 லுமென் திறன் வெளிச்சத்தை உமிழ்கிறது. மேலும், இந்த விளக்குகள், பிற விளக்குகளால் அறவே கொடுக்க முடியாத, 15 ஆயிரம் முதல், 20 ஆயிரம் மணி ஆயுட்காலத்தை கொடுக்கும்.லுமென் என்பது, ஒளியின் திறனை அளவிடும் அளவீடு.
என்ன கிடைக்கிறது? *அதிக அளவில், எல்.இ.டி., விளக்குகளை பயன்படுத்தும் மாநிலங்களால், தினமும், 68 லட்சம் கிலோவாட் மின்சக்தி மிச்சமாகிறது
* 'பீக் ஹவர்' எனப்படும், உச்சகட்ட நேர மின் தேவை, 645 மெகாவாட் ஆக குறைந்துள்ளது
* தினமும், 5,520 டன் கார்பன் மாசு வீழ்ச்சி அடைந்துள்ளது
* மின் கட்டணம், உற்பத்திச் செலவு போன்றவற்றில், தினமும், 2.71 கோடி ரூபாய் மிச்சம் ஏற்பட்டுள்ளது.
விலை எப்படி? மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளால், ஓராண்டிற்கு முன், 650 - 700 ரூபாயாக இருந்த ஒரு எல்.இ.டி., விளக்கின் விலை, இப்போது பாதியாக குறைந்துள்ளது; தற்போதைய சந்தை விலையில், 300 - 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது.மத்திய அரசின் திட்டப்படி, ஒரு எல்.இ.டி., விளக்கு, 78 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது; மீதமுள்ள தொகை, மானியமாக வழங்கப்படுகிறது
No comments:
Post a Comment