பரிசு 30 ரூபாய்க்கு தருவதோ காசோலை; பெற்றோர், ஆசிரியர்கள் அதிருப்தி
கோவை : பள்ளிகள் அளவில், நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு, 100 முதல் 30 ரூபாய் வரை வழங்கப்படும் பரிசுத்தொகை கட்டாயம் காசோலையாக மட்டுமே வழங்கவேண்டும் என்ற உத்தரவு பல்வேறு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
'அனைவருக்கும் கல்வி இயக்கம்' சார்பில், பள்ளி மாணவர்களுக்கு சுத்தம் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், 'முழு சுகாதார தமிழகம்' என்ற தலைப்பில், போட்டிகள் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள் அளவில், 2014 டிசம்பர் மாதமும் வட்டார அளவில் ஜனவரி மாதமும் நடந்தது. தற்போது, மாவட்ட, அளவில் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.இதில், ஓவியம், பேச்சு, கட்டுரை என மாணவர்களுக்கு பிரிவுகளின் அடிப்படையில், உடற்பயிற்சியின் அவசியம், சத்தான உணவு, கை கழுவும் தினம், தன் சுத்தம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.இதில், வெற்றி பெறும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுத்தொகைக்கும், மாநில அளவில், 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில், பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்டம் என மூன்று கட்டங்களாக நடத்தும் போட்டிகளுக்கு, 14 லட்சத்து, 64 ஆயிரத்து 740 ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.பள்ளிகள் அளவில் நடந்த போட்டிகளில், முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு முறையே 100, 50 30 ரூபாய் என, பரிசுத்தொகையாக கொடுக்க, பள்ளி ஒன்றுக்கு 300 ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. 100, 50 30 ரூபாய்க்கான பரிசுப் பணத்தை கட்டாயம் காசோலையாகவே வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இப்போட்டிகளுக்கு, மாணவர்களுக்கு பள்ளிகள் அளவில், 100 முதல் 30 ரூபாய் வரை; வட்டார அளவில், 350 முதல் 100 ரூபாய் வரை பரிசுத்தொகை காசோலையாக வழங்கப்படுகிறது. அதே சமயம், போட்டி நீதிபதிகளுக்கு மதிப்பூதியம் 6000 ரூபாய் வரையும், தேனீர் செலவினங்களுக்க 4000 ரூபாய் வரையும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெற்றோர் ஒருவர் கூறுகையில், 'என் மகன் மூன்றாவது வகுப்பு படிக்கிறான். ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றதற்காக, 30 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. 'மகனை வங்கிக்கு தனியாக அனுப்ப முடியுமா, கட்டாயம் நானும் உடன் செல்லவேண்டும். 30 ரூபாய் வாங்க, நான் 300 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது. இதுபோன்று, குறைவான பரிசு தொகையை புத்தகமாகவோ, சான்றிதழ்களாகவோ வழங்கினால், மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்' என்றார்.
ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'மாணவர்களுக்கு பரிசுத்தொகை காசோலையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 50 ரூபாய்க்கும், 30௦ ரூபாய்க்கும் காசோலை வழங்குவதால், என்ன பயன்? இதில், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. 'அதிகாரிகள் எதையும் சிந்திக்காமல் உத்தரவுகளை மட்டும் பிறப்பிக்கின்றனர்' என்றார்.
No comments:
Post a Comment