பள்ளிக்கூடங்களில் நாளை தாய்மொழி தினம் கொண்டாட்டம்; பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வேண்டுகோள்படி தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களில் நாளை (சனிக்கிழமை) தமிழ்மொழியில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது.
தாய்மொழி தினவிழா
இந்தியா முழுவதும் பிப்ரவரி 21-ந்தேதியை (நாளை) தாய்மொழி தினமாக கொண்டாடுங்கள் என்று சி.பி.எஸ்.இ.பள்ளிகளுக்கு சுற்றறிக்கையை மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
சர்வதேச தாய்மொழி தினவிழா நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த தினத்தை இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடவேண்டும். குறிப்பாக பள்ளிக்கூடங்களில் கொண்டாடவேண்டும். சி.பி.எஸ்.இ. அனுமதி பெற்ற அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் கொண்டாடுங்கள்.
தாய் மொழி தினம் முழுக்க முழுக்க தாய்மொழியை மேம்படுத்தவும், பாரம்பரிய கலாசாரத்தை வளர்க்கவும் கொண்டாடவேண்டும். அதாவது பள்ளிக்கூடங்களில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையை கொடுத்து அதை தாய்மொழியில் மொழிபெயர்ப்பு செய்தல் நல்லது.
கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி
அறிவு தொடர்பான போட்டி உள்பட அனைத்துவித போட்டிகளையும் தாய்மொழியில் படித்தவர்களுக்கும், ஆங்கிலவழியில் படித்தவர்களுக்கும் நடத்தவேண்டும். தாய்மொழியில் கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி ஆகியவற்றை நடத்தி தாய்மொழி தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். இதை அதிக நாட்கள் தொடர்ந்துசெய்யவேண்டும். தாய்மொழி தவிர மேலும் ஒரு இந்திய மொழியை படிப்பது நல்லது அதை மாணவ-மாணவிகளிடம் ஊக்கப்படுத்துங்கள்.
அந்நிய மொழி கலக்காமல் தாய்மொழியில் எழுதவும், படிக்கவும் கற்பித்துகொடுங்கள். தாய்மொழியில் பேசி விளையாடுங்கள். தாய்மொழியையும் இந்திய மொழிகளையும் மேம்படுத்துங்கள். மொத்தத்தில் பள்ளிக்கூடங்களில் தாய்மொழித்திருவிழாபோல நடத்தப்படவேண்டும்.
இதனால் தாய்மொழியில் படிக்காத மாணவர்களும் தாய்மொழியை நன்றாக எழுதத்தெரிந்துகொள்ளவேண்டும். இவ்வாறு தாய்மொழி விழா நடத்துவதால் மாணவ-மாணவிகளுக்கு பேச்சாற்றல் வளரும்.
வீடியோ எடுத்து அனுப்புங்கள்
பள்ளிகளில் தாய்மொழிவிழா நடத்துவதை வீடியோ, புகைப்படம் எடுத்து அருகில் உள்ள சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பவேண்டும். தமிழ்நாட்டைப்பொருத்தவரை தாய்மொழியாம் தமிழில் பள்ளிக்கூடங்களில் நடத்தும் மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் நடத்துங்கள்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த சுற்றறிக்கையின்படி தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தாய்மொழியாம் தமிழ்மொழியில் தாய்மொழி தினம் நடத்தப்படுகிறது.
No comments:
Post a Comment