Monday, August 18, 2014

செய்தி

ஒரு பணியிலிருந்து இன்னொரு பணிக்கு மாறும்போது...

         ஒருவர் ஒரு பணியிலிருந்து விலக பல்வேறு காரணங்கள் இருக்கலாம். குடும்ப காரணங்கள், உள் அலுவலக சிக்கல்கள், செய்யும் பணியில் சலிப்பு மற்றும் புதிய பணி வாய்ப்புகள் என்று பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

          காரணம் எதுவாக இருந்தாலும், செய்யும் ஒரு பணியிலிருந்து விலகுவது என்பது ஒரு பெரிய மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த முடிவு. எனவே, அந்த முடிவை எடுப்பதற்கு முன்னர், தீர யோசிக்க வேண்யது அவசியம்.


பணியிலிருந்து விலகியே ஆக வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், உங்களின் பணி விலகல் நடவடிக்கையை எந்த முறையில் மேற்கொள்ளலாம் என்பது குறித்த ஆலோசனைகளை இக்கட்டுரை வழங்குகிறது.

நல்ல முறையிலேயே விலகுங்கள்

உங்களுக்கு உங்களது பணியின் மீதோ அல்லது நிர்வாகத்தின் மீது வெறுப்பு இருந்து, அதன்பொருட்டு, பணியிலிருந்து விலகலாம். ஆனால், அந்த காரணத்தை அலுவலகத்தில் தேவையின்றி கசிய விடவேண்டாம். என்ன காரணத்திற்காக பணியை விட்டு செல்கிறீர்கள் என்று நிர்வாகம் கேட்டாலும்கூட, அவர்களின் மீதான அதிருப்தியை அழுத்தமாக வெளிக்காட்டாமல், நயமான காரணத்தை மட்டுமே சொல்லுங்கள்.

இனிமேல் இந்த நிறுவனத்தைப் பற்றி நமக்கு என்ன இருக்கிறது, நமக்கும், இதற்கும் என்ன சம்பந்தம் என்று நினைத்து, உங்களின் வெறுப்பை வெளிப்படையாக தெரிவித்துவிட்டு வந்துவிட வேண்டாம். ஏனெனில், பின்னாளில் நீங்கள் வேறு நிறுவனத்தில் சேரும்போது, உங்களின் பழைய பணியிடங்களில், புதிய நிறுவனத்தார், உங்களைப் பற்றி விசாரிக்க முடிவெடுத்தால், உங்களுக்கு சிக்கல் ஏற்படலாம். எனவே, நல்லமுறையிலேயே வெளியேறுங்கள்.

முன்னறிவிப்பு நோட்டீஸ்

புதிய பணியில் எப்போது சேரப் போகிறீர்கள் என்பதை உறுதி செய்தவுடன், பழைய நிறுவனத்திலிருந்து எப்போது விலக வேண்டும் என்பதை முடிவுசெய்து, அதன்பொருட்டு, முன்னறிவிப்பு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். இது, பல இடங்களிலும் கடைபிடிக்கப்படும் ஒரு பொதுவான நடைமுறைதான்.

Notice Period என்று அழைக்கப்படும் அந்த காத்திருப்பு காலம், நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். சில இடங்களில், 2 வார காலஅளவும், சில இடங்களில் 2 மாத காலமும் உண்டு. ஆனால், பெரும்பாலான இடங்களில், 1 மாத காத்திருப்பு காலம்தான் கடைபிடிக்கப்படுகிறது.

முறையாக, நோட்டீஸ் கொடுத்து வெளியேறும்போதுதான், உங்களுக்கான அனுபவ கடிதம் மற்றும் வெளியேறும் அனுமதி(Relieving order), முழு salary settlement உள்ளிட்ட பல விஷயங்கள் முறையாக கிடைப்பதுடன், புதிய நிறுவனத்திற்கும் உங்களின் மீது ஒரு மதிப்பு உண்டாகும்.

காரணம் தெரிவித்தல்

ஒரு நிறுவனத்தைவிட்டு, ஏன் விலகுகிறீர்கள் என்ற காரணம், பெரும்பாலான இடங்களில், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம், நேரடியாக சொல்லப்படுகிறது. நிறுவனத்தையும், பதவியையும் பொறுத்து, அதிகாரி அளவிலோ அல்லது நிறுவனர் அளவிலோ காரணத்தை சொல்ல வேண்டியிருக்கும்.

காரணத்தை சொல்லும்போது, எதையும் எதிர்மறையாக அணுக வேண்டாம். சரியான நடைமுறையைக் கடைபிடித்து, உங்களின் விலகுதலை சுமுகமாகவே முடித்துக் கொள்ளவும்.

பணி விலகல் கடிதம்

பணி விலகல் கடிதத்தை எழுதும்போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். ஏனெனில், வேலையைத்தான் விடப்போகிறோமே, இனி இவர்களின் தேவை நமக்கெதற்கு? என்று அலட்சியம் காட்டிவிடக்கூடாது. ஏனெனில், பழைய நிறுவனத்தின் Reference எப்போது வேண்டுமானாலும் தேவைப்படலாம்.

எனவே, கடிதத்தை எழுதும்போது, உங்களுக்கான காரணங்களை நயமாக தெரிவித்து எழுத வேண்டும். உங்களின் கடிதம், நீங்கள் விலகும் நிறுவனத்தின் ஆவண பாதுகாப்பில்(Record maintenance) வைக்கப்படக்கூடிய ஒன்று என்பதையும் மறக்க வேண்டாம்.

பரிந்துரைக் கடிதம்

பெரும்பாலான நிறுவனங்களில், பரிந்துரைக் கடிதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனவே, உங்களின் உறவு சிறப்பாக இருந்தால்தான், பழைய நிறுவனத்திடமிருந்து நீங்கள், உங்களுக்குத் தேவையான பரிந்துரைக் கடிதத்தை வாங்க முடியும். பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றிருப்பதன் மூலம், நீங்கள் பணிக்கு சேரும் நிறுவனத்தில், உங்களின் முக்கியத்துவத்தைக் கூட்டி காண்பித்து, அதன்மூலம் அதிக ஊதியம் உள்ளிட்ட நன்மைகளைப் பெற முடியும்.

நன்றி தெரிவித்தல்

உங்களுக்கு ஒரு வாய்ப்பளித்து, வளர்ச்சிக்கு உதவியமைக்காக, உங்களின் பழைய நிறுவனத்திற்கு கட்டாயம் நன்றி தெரிவிக்க வேண்டும். அதை கடிதம் மூலமாகவும் தெரிவிக்கலாம். நீங்கள் நிறைய கற்றுக்கொள்வதற்கு, அவர்கள் வாய்ப்பளித்ததாக குறிப்பிட வேண்டும்.

நீங்கள், பழைய நிறுவனத்தில் எந்த புதிய விஷயத்தைக் கற்றுக் கொண்டீர்கள் மற்றும் எந்த திறமையை மெருகேற்றிக் கொண்டீர்கள் என்பதை குறிப்பிட்டால், அவர்கள் இன்னும் மகிழ்ச்சியடைவார்கள்.

எதையும் மறக்க வேண்டாம்

நீங்கள் பணியை விட்டு விலகும்போது, உங்களுக்கு வர வேண்டிய இறுதி சம்பள செட்டில்மென்ட் மற்றும் இதர நன்மைகள் பற்றி நீங்கள் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். மேலும், உங்களின் PF கணக்கை அத்துடன் மூடிவிட்டு பணத்தைப் பெற்றுக்கொள்வதா? அல்லது நீங்கள் பணி மாறிச்செல்லும் நிறுவனத்தின் PF கணக்கிற்கு மாற்றிக்கொள்வதா? என்பதை முடிவுசெய்ய வேண்டும்.

நீங்கள் பழைய நிறுவனத்தில், பணியில் சேரும்போது, உங்களின் அசல் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஏதேனும் ஆவணங்களைக் கொடுத்திருந்தால், அதை மறக்காமல் பெற்றுக்கொள்ள வேண்டும்.

திரும்ப ஒப்படையுங்கள்

நீங்கள் பழைய நிறுவனத்தில் பணியாற்றும்போது, உங்களுக்கு பணியின் பொருட்டு, அந்த நிறுவனத்தின் சார்பில், Lap top, Data Card, Pen drive and Cell Phone உள்ளிட்ட ஏதேனும் பொருட்கள் வழங்கப்பட்டிருக்கலாம். மேலும், சில நிதி தொடர்பான கணக்கு வழக்குகளும் உங்களிடம் இருக்கலாம்.

எனவே, பணியிலிருந்து விலகும்போது, நீங்கள் பெற்ற பொருட்களை, முறையாக ஒப்படைத்து, நிதி தொடர்பான கணக்கு வழக்குகள் இருந்தால், அதையும் சரியாக செட்டில் செய்துவிட வேண்டும். அப்போதுதான் உங்களின் நம்பகத்தன்மை காப்பாற்றப்படுவதுடன், உங்களின் மதிப்பும் உயரும்.

ஒருவேளை இப்படி நடந்தால்...

நீங்கள் பணி விலகலைப் பற்றி உங்களின் பழைய நிறுவனத்தில் தெரிவிக்கும்போது, உங்களுக்கு சில எதிர்பாராத இன்ப அதிர்ச்சிகளும் காத்திருக்கலாம். நீங்கள் புதிய நிறுவனத்தில் என்ன சம்பளம் பெறப்போகிறீர்களோ, அதேயளவிற்கு அல்லது அதைவிட அதிகமாக உயர்த்தி வழங்க, பழைய நிறுவனம் முன்வரலாம்.

அத்தகைய சூழலில், நீங்கள் நன்கு யோசித்து முடிவெடுக்க வேண்டும். சற்று அவகாசம்கூட கேட்கலாம். பழைய நிறுவனத்திலேயே, புதிய சலுகையைப் பெற்றுக்கொண்டு இருந்துவிடலாமா? அல்லது புதிய நிறுவனத்தின் புதிய சூழலுக்கு செல்வதே சிறந்ததா? என்பதை நன்கு யோசித்து முடிவு செய்தல் வேண்டும்.

அவர்கள் வற்புறுத்தினால்...

சில நிறுவனங்கள், தங்களின் பணியாளர்கள், வேறு நிறுவனங்களுக்கு மாறுதலாகி செல்லும்போது, நோட்டீஸ் காலஅளவை விட, கூடுதலாக இருந்துவிட்டு, சில பணிகளை முடித்துவிட்டு செல்ல நிர்பந்திக்கும். அப்படி ஒரு சூழலில், அது நியாயமானது என்று கருதினால், நீங்கள் புதிய நிறுவனத்திடம் அனுமதி கேட்டு, அதற்கேற்ப முடிவெடுக்கலாம்.

ஒருவேளை அது சாத்தியமே இல்லை எனும் நிலை இருந்தால், அதைப்பற்றி நாசுக்காக தெரிவித்து, சுமுகமாக மறுத்துவிடுதலே சிறந்தது.

அதை செய்யவில்லை என்றால்...

ஒருவேளை, உங்களால் Notice period கொடுக்க முடியவில்லை என்றால், அதற்கு பதிலாக வேறுமாதிரியான பிரதியுபகாரத்தை செய்ய வேண்டும். உங்களுக்கு பதிலாக பணியமர்த்தப்படும் ஒருவருக்கு பயிற்சியளித்தல், வேலை நேரத்திற்கும் கூடுதலாக இருந்து பணிபுரிந்துவிட்டு செல்லுதல், வேலையை விட்டு நீங்கிய பிறகு, தேவைக்கருதி, தொலைபேசி அல்லது மின்னஞ்சல் வாயிலாக, பழைய நிறுவனத்திடம் தொடர்பில் இருந்து உதவுதல் மற்றும் சில விடுமுறை நாட்களில், பழைய நிறுவனத்திற்கு வந்து, புதிதாக பணியமர்த்தப்பட்ட நபருக்கு பயிற்சியளித்துவிட்டு செல்லுதல் போன்ற மாற்று செயல்களை மேற்கொள்ளலாம்.

எதிர்மறை பேச்சு வேண்டாம்

நாம் பணியை விட்டு செல்லப்போகிறோம் என்று சொல்லும்போது, சில நண்பர்கள், பழைய நிறுவனம் பற்றிய எதிர்மறை கருத்துக்களை தெரிவிப்பார்கள். அந்த சமயத்தில், நீங்கள் அதை நாசுக்காக தவிர்த்து விடுவதே நல்லது.

பொதுவாக, ஒரு பணியிலிருந்து செல்லும்போது, அய்யோ, அவன் சென்றுவிட்டானே! என்று பிறர் வருந்தும் நிலையை நாம் உருவாக்குவதுதான் நமது வெற்றி. எனவே, நிர்வாகம் பற்றியோ அல்லது சக பணியாளர் பற்றியோ, எதிர்மறை கருத்துக்களை எக்காரணம் கொண்டும் உதிர்க்க வேண்டாம். ஏனெனில், நாம் அறியாத வண்ணம், சில எதிர்மறை விளைவுகளை நாம் அதன்மூலம் எதிர்கொள்ள நேரலாம்

No comments: