ஓட்டுபோடுவதில் அரசு ஊழியர்களுக்கு ஆர்வமில்லை !
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தங்களது ஓட்டுரிமையை பயன்படுத்த ஆர்வமின்றி உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் 57 சதவீதத்தினர் மட்டுமே தபால் ஓட்டு பெற்றுள்ளனர்.
ஜனநாயக நாடான இந்தியாவை நிர்வகிக்கும் மக்கள் பிரதிநிதிகளை, ஓட்டுரிமை பெற்ற மக்களே தேர்வு செய்து வருகின்றனர். இதற்காக தேர்தல் ஆணையம், ஒவ்வொரு தேர்தலுக்கும் வாக்காளர் பட்டியலை தயாரித்து வருகிறது. பட்டியலில் இடம் பெற்றவர்களில் 60 முதல் 70 சதவீதத்தினரே தேர்தலில் ஓட்டு போடுகின்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை, ஓட்டுச் சாவடிகளில் நெரிசல், ஓட்டுப்பதிவு நேரம் குறைவாக உள்ளதே ஓட்டுப்பதிவு குறைவிற்கு காரணமாக கூறப்பட்டது. இந்த குறைபாடுகளை 16வது லோக்சபா தேர்தலில் நீக்கிட தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடு செய்துள்ளது. அதனையொட்டி கடந்த 2011 சட்டசபை தேர்தலை தொடர்ந்து வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மேற்கொண்டு, கடந்த 5ம் தேதி இறுதி பட்டியலை வெளியிட்டது.
நேரம் அதிகரிப்பு
அனைத்து வாக்காளர்களும் ஓட்டுப் போட வசதியாக கிராமங்களில் 1300 பேருக்கும், நகரங்களில் 1500 பேருக்கு ஒரு ஓட்டுச்சாவடி அமைத்ததோடு, ஓட்டுப்பதிவு நேரத்தையும் 2 மணி நேரம் அதிகரித்தது. ஓட்டுரிமையின் அவசியத்தை விளக்கி தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த மூன்று மாதங்களாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் கலைக்குழுக்களை கொண்டு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தியது. பிரபல நடிகர்களை கொண்டு ரேடியோ மற்றும் தொலைக்காட்சிகள் வழியாகவும் பிரசாரம் செய்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து பல வர்த்தக நிறுவனங்களும், தேர்தல் அன்று ஓட்டு போட்டுவிட்டு வரும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது.தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை கிராமப்புற மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், படித்தவர்களில் குறிப்பாக அரசு ஊழியர்களில் பலர் இன்னமும் ஓட்டுப் போடுவதில் ஆர்வமின்றி உள்ளனர்.
தபால் ஓட்டு
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு, தபால் ஓட்டு போடும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு, தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் உரிய படிவத்தை பூர்த்தி செய்து தேர்தலுக்கு முன்பாக மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பித்தால், அந்த முகவரிக்கு ஓட்டுச் சீட்டு தபாலில் அனுப்பி வைக்கப்படும். அதில், தனது ஓட்டை பதிந்து ஓட்டு எண்ணுவதற்கு முதல் நாளுக்கு முன்பாக தொகுதி தேர்தல் அலுவலகத்தில் வைத்துள்ள சீலிடப்பட்ட ஓட்டுப் பெட்டியில் சேர்க்க வேண்டும். சொந்த தொகுதியிலேயே பணிபுரிபவர்கள், தேர்தல் ஆணைய சான்றை சமர்பித்து, தாங்கள் பணிபுரியும் ஒட்டுச் சாவடிகளிலேயே ஓட்டளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
57 சதவீதம்
விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் 14 ஆயிரத்து 530 அரசு ஊழியர்கள், 4,681 போலீசார் ஈடுபடுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் தபால் ஓட்டிற்கான படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில், அரசு ஊழியர்களில் 8,461 பேரும், போலீசாரில் 2,490 பேர் மட்டுமே படிவத்தை பூர்த்தி செய்து, ஓட்டுச் சீட்டு கேட்டு சமர்பித்துள்ளனர். இது தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களில் 57 சதவீதமாகும். அவர்களுக்கு மட்டுமே ஓட்டுச் சீட்டு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓட்டுப் போடுவது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை என வீதி, வீதியாக பிரசாரம் செய்த அரசு ஊழியர்களே ஓட்டுப்போட ஆர்வமின்றி உள்ளதையே இது காட்டுகிறது.
No comments:
Post a Comment