Sunday, December 29, 2013

PallikudamNEWS

11ம் வகுப்பிற்கு முப்பருவ கல்வி: வலியுறுத்தும் கல்வித்துறை

             "தனியார் பள்ளிகள், அரசு விதிமுறைகளை மதிக்காமல், பிளஸ் 1 வகுப்பில் முழுக்க முழுக்க பிளஸ் 2 பாடத்தையே நடத்துகின்றன. 
          இதை தவிர்க்கவும், பிளஸ் 1 வகுப்பிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவும், முப்பருவ கல்வி முறையை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்" என கல்வித்துறை வலியுறுத்தி உள்ளது.
              தனியார் பள்ளிகளின் வளர்ச்சியில், பிளஸ்2, 10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள், 100 சதவீத பங்கை வகிக்கின்றன. 100 சதவீத தேர்ச்சி மற்றும் மாநில அளவில், குறிப்பிடத்தக்க இடங்களை பெறுவதன் மூலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகள், பிரமாண்ட வளர்ச்சியை பெற்றுள்ளன.
               வட மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோரும், தங்கள் பிள்ளைகளை, இந்த மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்து, லட்சக்கணக்கில் செலவழிக்கின்றனர். தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பிலும், பிளஸ் 1  வகுப்பிலும், அந்த வகுப்பிற்குரிய பாடங்களுக்கு, முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஒன்பதாம் வகுப்பில், 10ம் வகுப்பு பாடத்தை நடத்துவதையும், பிளஸ்1 வகுப்பில், பிளஸ்2 பாடத்தை நடத்துவதையும், பல ஆண்டுகளாக, கடைப்பிடித்து வருகின்றனர்.
                இரு ஆண்டுகள், ஒரே பாடத்தை படிப்பதன் மூலம், மாணவர்களுக்கு, பாடப் பகுதிகள், நன்றாக மனப்பாடம் ஆகிவிடுகின்றன. தேர்வில் சாதிப்பதற்கு இதுவே காரணமாக உள்ளது. இதுபோன்ற விதிமீறலை தடுக்கவும், பிளஸ்1 வகுப்பிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவும், இந்த வகுப்பிலும் முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தலாம் என கல்வித்துறை கருதுகிறது.
              அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிளஸ்1 வகுப்பு, பெயர் அளவிற்குத் தான் உள்ளது. பாடமும், சரியாக நடத்துவதில்லை; தேர்வும், முறையாக நடப்பதில்லை. முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தினால், தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும், முறையாக, பிளஸ் 1 வகுப்புகள் நடக்கும்.
               அந்தந்த பருவ பாடங்களை, ஆசிரியர் நடத்துவர்; தேர்வும் முறையாக நடக்கும். இதனால், முன்கூட்டியே, பொது தேர்வு பாடங்களை நடத்துவதையும் தடுக்க முடியும்.
              தற்போது, ஒன்பதாம் வகுப்பிலும், முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அனைத்து பள்ளிகளிலும் ஒன்பதாம் வகுப்பு பாடங்கள், சரியாக நடக்கின்றன. 10ம் வகுப்பு பாடத்தை, முன்கூட்டியே நடத்துவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.
                பத்தாம் வகுப்பிற்கு, முப்பருவ கல்வி முறை வருவதே, பெரும் குழப்பத்தில் உள்ள நிலையில், பிளஸ் 1 வகுப்பிற்கு வருமா என்பது கேள்விக்குறியே.

No comments: