அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் சரியாக படிக்காவிட்டால், புத்தகத்தில் உள்ளதை வாசிக்கத் தெரியாவிட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு மெமோ கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து கல்வித் துறை இணை இயக்குநர் பாலமுருகன் கூறியதாவது:
கடந்த ஆண்டு கூட்டத்தில், தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக அதிக தேர்ச்சியை வழங்குவோம் என வாக்குறுதி கொடுத்தீர்கள். ஆனால், அத்தனையும் தேர்தல் வாக்குறுதிகளாக மாறி விட்டது. தமிழகத்தில், தேர்ட்சியளவில் சேலம் மாவட்டம், 19-வது இடத்தில் உள்ளது.தேர்ச்சியை அதிகரிக்க பல மாற்றங்களை அறிவுறுத்தினோம். அதை, ஆசிரியர்கள் யாரும் பின்பற்றவில்லை. அன்பாக கூறி கேட்கவில்லை என்பதால், அடுத்து நடவடிக்கையில் இறங்க வேண்டியதுதான்.
உங்களிடம் வரும் மாணவனை, 100 சதவீத மதிப்பெண் எடுக்ககட்டாயப்படுத்தவில்லை. 35 சதவீத மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற வைக்க கூறுகிறோம். அதை கூட நிறைவேற்ற முடியவில்லை. அரசு பள்ளிகளில், ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளில், இடைநிற்றல் வரக்கூடாது என்பதற்காக, ஆல் பாஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால்,ஆசிரியர்கள் மாணவர்கள் படித்தாலும் சரி படிக்காவிட்டாலும் சரி என்று விட்டு விட்டனர்.ஆல் பாஸ் என்பதற்க்காக ஆசிரியர்கள் யாரையும் கற்பிக்க வேண்டாம் என கூறவில்லை. இவ்வாண்டு ஆகஸ்ட் வரை, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு மேல், ஆய்வின்போது, ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவனுக்கு வாசிக்க தெரியவில்லை என்றால், அந்த ஆசிரியருக்கு உடனடியாக, மெமோ வழங்கப்படும்.அதேபோல, பள்ளியிலுள்ள வகுப்பறையை ஆர்வத்துடன் சுத்தமாக வைத்திருப்பதை ஆசிரியர்கள் முதல் கடமையாக நினைக்க வேண்டும். அதேபோல், தன் அறையில் அமர்ந்திருப்பது மட்டும் தலைமை ஆசிரியர் பணியல்ல. காலை இரு வகுப்புகள், மாலை இரு வகுப்புகளை கண்காணித்து, அந்த ஆசிரியர் நடத்தும் கற்பித்தல் முறையில் குறை இருப்பின் அதை சுட்டிக்காட்டி ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் முறையில் திருத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.