Sunday, March 20, 2016

pallikudam

4.50 லட்சம் தபால் ஓட்டுகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

     தமிழகத்தில், தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள, 4.50 லட்சம் ஊழியர்கள், தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.

        இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:தமிழகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், 3 லட்சம் பேர்; போலீசார், 75 ஆயிரம் பேர்; டிரைவர்கள், கிளீனர்கள், 75 ஆயிரம் பேர் என, மொத்தம், 4.50 லட்சம் பேர், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

        அவர்கள் அனைவரும் தபால் ஓட்டு போட, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண் சேகரிக்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களை, பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

          தபால் ஓட்டு போடுவோர், தபால் ஓட்டு பெற, ஆன்லைனில் விண்ணப்பிக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

pallikudamnews

RMSA training for social teachers?

       பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், பிளஸ் 1 வகுப்பு இறுதி தேர்வு நடந்து வரும் நிலையில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் கீழ், மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது
        பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. தேர்வு அறை கண்காணிப்பு பணி; விடைத்தாள் திருத்தும் பணி; 'டிஸ்லெக்சியா ' எனப்படும் கற்றல் குறைபாடு உள்ள மாணவர் மற்றும் மாற்று திறனாளி மாணவர்களுக்கு உதவி செய்யும் பணி என, ஆசிரியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

ஆனால், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, 'கட்டகங்கள்' எனப்படும் பயிற்சி கையேடு தயாரிப்பது குறித்து, 10 நாள் பயிற்சி முகாமை, ஆர்.எம்.எஸ்.ஏ., அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மார்ச், 17 முதல், மாநிலம் முழுவதும் இந்த பயிற்சி முகாம் துவங்கியுள்ளது. இதில் பங்கேற்க வரும்படி, சமூக அறிவியல் ஆசிரியர்கள் திடீரென கட்டாயமாக அழைக்கப்பட்டதால், தேர்வு பணி மற்றும் பள்ளிகளில், மூன்றாம் பருவ பாடம் எடுக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு வந்து விட்ட நிலையில், பயிற்சியே கண்ணாய் இருக்கும் அதிகாரிகளின் நிலையை நினைத்து, தலைமை ஆசிரியர்களும், சமூக அறிவியல் ஆசிரியர்களும் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். 'அதிகாரிகளே... உங்கள் கடமை உணர்வுக்கு அளவே இல்லையா?' என, மனம் நொந்தபடி நிலைமையை சமாளித்து வருகின்றனர்.

Tuesday, March 15, 2016

pallikudam

 தமிழகம் முழுவதும் 363 இடங்களில் வாக்காளர் சேவை மையங்கள் தொடக்கம்: 3 இடங்களில் உடனடி வாக்காளர் அட்டை வழங்க நடவடிக்கை                                                                                                                                           தமிழகம் முழுவதும் 363 வாக்காளர் சேவை மையங்கள் நேற்று முதல் செயல்படத் தொடங்கின. 3 இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை உடனடியாக தயாரித்து வழங்கும் இயந்திரங்களும் நிறுவப்பட்டுள்ளன.
         தமிழக சட்டப்பேரவைக்கு மே 16-ம் தேதி ஒரே கட்டமாக வாக் குப்பதிவு நடத்தப்படுகிறது. இதை யடுத்து, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேர்தல் ஆணையம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 22-ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன் ஏப்ரல் 15-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி, தற்போது கல்லூரி களில் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை பெயர் சேர்க்காதவர்கள் ஆன்லைன் மூலம் சேர்த்துக் கொள்ள லாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத் தம், முகவரி மாற்றம், புதிய வாக்காளர் அட்டை பெறுதல் உள் ளிட்ட பணிகளில் பொதுமக்களுக்கு உதவுவதற்காக டிஆர்ஓ அலுவல கங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவல கங்கள் மற்றும் சென்னை மாநக ராட்சி மண்டல அலுவலகங்கள் என என 363 இடங்களில் வாக்காளர் சேவை மையம் அமைக்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்திருந்தார்.
இதன்படி, தமிழகம் முழுவதும் வாக்காளர் சேவை மையங்கள் நேற்று முதல் செயல்பட தொடங் கின. மேலும், சென்னையில் 3 இடங் களில் புதிய வாக்காளர் அடையாள அட்டை தயாரிப்பதற்கான இயந் திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த மையங்களில், தேர்தல் தொடர் பான புகார் தெரிவிப்பதற்கான சேவையும் விரைவில் தொடங் கப்பட உள்ளது.
கூடுதல் துணை ராணுவப் படைகள்
தமிழகத்தை பொறுத்தவரை தற்போது 65, 616 வாக்குச் சாவடிகள் உள்ளன. வாக் காளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஏற்கெனவே 700-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு ஆணையத்தின் அனுமதியை தமிழக தேர்தல் துறை கோரி யுள்ளது. இதுதவிர, தற்போது மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் பதற்ற மான, மிக பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவற்றில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.
துணை ராணுவப்படையின் தேவை தொடர்பாக ஆலோசிக்க, தேர்தல் ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியும் பங்கேற்றார். இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘‘கடந்த தேர்தலின்போது 240 கம்பெனி துணை ராணுவப்படையினர் வந்துள்ளனர். ஒரு கம்பெனிக்கு 72 வீரர்கள் இருப்பார்கள். இந்தமுறை துணை ராணுவப் படையினர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கப்படும் என தெரிகிறது’’ என்றார்.

Sunday, March 13, 2016

Pallikudam

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் வருகை: திடீர் ஆய்வு மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவு

       தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் வருகை தருகிறார்களா என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

        இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (எஸ்.எஸ்.ஏ) மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆண்டாய்வு மற்றும் பள்ளிகள் பார்வை ஆகியவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.

உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், அறிவியல் மற்றும் நர்சரி உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவை அமைத்து பள்ளிகளில் முன்னறிவிப்பின்றி ஆய்வு மேற்கொள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (எஸ்எஸ்ஏ) மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆய்வு குறித்த தகவல் ரகசியமாக இருக்க வேண்டும். தொடர்ந்து புகார்கள் வரும் பள்ளிகள் மற்றும் கல்வித் தரத்தில் பின்தங்கிய பள்ளிகளைத் தேர்வு செய்து திடீர் ஆய்வு மேற்கொள்ளவேண்டும்.

குழுவினர் ஆய்வு மேற்கொள்ளும் போது, ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருகை தருவது குறித்தும், வேலை நேரம் முழுவதும் பள்ளியில் இருப்பது குறித்தும் முதலில் ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும், மாணவர்களின் முன்னேற்றம், பள்ளி நூலகம் பயன்பாடு, நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ள விவரம், கழிப்பறை வசதி, துப்புரவு பணியாளர்கள் பணி செய்வது குறித்த விவரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளதா என்பன போன்ற விவரங்களை ஆய்வு செய்து அது தொடர்பான விவரத்தை தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Pallikudamnews

மாயமாகும் ஆசிரியர்களின் தபால் ஓட்டுகள்

         தமிழகம் முழுவதும், ஆசிரியர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை தருமாறு, கல்வி அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். 

      இதனால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சட்டசபை தேர்தலையொட்டி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். தேர்தல் பணிக்கு விருப்பமுள்ளவர்களின் பட்டியலை தயார் செய்ய, மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டன.

ஆனால், கல்வித்துறை அதிகாரிகள் அனைத்து ஆசிரியர்களுக்கும் விண்ணப்பம் வழங்கி, அதில் தேர்தல் பணியாற்ற விருப்பமுள்ளதாக கட்டாயமாக எழுதி வாங்குகின்றனர்.

அந்த விண்ணப்பத்துடன் அனைத்து ஆசிரியர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண், வாக்காளர் பட்டியல் விவரங்களையும் சேகரிக்கின்றனர்.அதனால் பள்ளி ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். உடல் நலன் குறைவான ஆசிரியைகள், மகப்பேறு காலத்திலுள்ள ஆசிரியைகள், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய் பாதிப்புள்ள ஆசிரியர்கள் போன்றோருக்கு, தேர்தல் பணிகளில் விலக்கு உண்டு.

ஆனால், அவர்களிடம் வாக்காளர் விவரங்களை, தொகுதி வாரியாக, பாகம் எண்ணுடன் பெறுவதால், ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.லோக்சபா தேர்தலில் நடந்தது போல், இந்த முறையும் தங்களின் தபால் ஓட்டு மாயமாகி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இந்த பிரச்னை குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம், ஆசிரியர் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.

வேதனையாக உள்ளது!ஆசிரியர்களின் வாக்காளர் விவரங்களை பெற்று,

தேர்தல் பணிக்கு செல்லும் முன், முகாம் அலுவலகத்திலேயே மின்னணு ஓட்டு இயந்திரங்கள் வைத்து, ஆசிரியர்களின் ஓட்டுக்களை பதிய செய்ய வேண்டும். இல்லையென்றால் எங்களின் தபால் ஓட்டுக்கள் பறிபோய் விடும். தேர்தல் பணியில் இருக்கும் எங்களுக்கே ஓட்டுரிமை மறைமுகமாக பறிக்கப்படுகிறது என்பது வேதனையாக உள்ளது

தியாகராஜன் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர்

தேர்தல் பணியில் ஈடுபடும்அனைவருக்கும் தபால் ஓட்டு!தேர்தல் பணியில் ஈடுபடும், அரசு ஊழியர்கள் அல்லாதவர்களுக்கும் தபால் ஓட்டு வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

இதுவரை நடந்த தேர்தல்களில், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் ஆகியோருக்கு மட்டும், தபால் ஓட்டு வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், வரும் தேர்தலில், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும், அரசு வாகன டிரைவர்கள், தனியார் வாகன டிரைவர்கள், கிளீனர்கள் ஆகியோருக்கும் தபால் ஓட்டு வழங்கப்படும். அதேபோல, ஓட்டுச் சாவடிகளில், 'வெப் கேமரா, வீடியோ' பதிவு போன்றவை மேற்கொள்ளப்பட உள்ளன.

இப்பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கும், தபால் ஓட்டு வழங்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார், தனியார் என, அனைவரிடமும் வாக்காளர் அடையாள அட்டை எண் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மே 2ம் தேதி, தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்குகிறது. பயிற்சி வகுப்பு நிறைவு நாளில், அனைவருக்கும் தபால் ஓட்டு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

லோக்சபா தேர்தலில் ஓட்டுரிமை பறிபோனது!

கடந்த லோக்சபா தேர்தலில், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் யாரும் தபால் ஓட்டு போடவில்லை. ஆனால், அனைவரின் ஓட்டுகளும் பதிவானதாக குறிப்பிட்டிருந்தனர். இது எப்படி என்று, தற்போது வரை மர்மமாகவே உள்ளது.

வழக்கமாக, தேர்தலுக்கு 15 நாட்களுக்கு முன், வாக்காளர் பட்டியல் விவரம் வாங்குவர். தேர்தலுக்கு, ஐந்து நாட்களுக்கு முன் தபால் ஓட்டு விண்ணப்பம் கொடுப்பர். தேர்தல் பணிக்கு செல்லும் முன், தேர்தல் அலுவலர் முகாம்களில் வைக்கப்பட்ட பெட்டியில், தபால் ஓட்டாக, விண்ணப்பங்களை பதிவு செய்து விட்டு செல்வோம்.

ஆனால், லோக்சபா தேர்தலில் விண்ணப்பமே வழங்காமல், எங்கள் ஓட்டுரிமை பறிபோனது. இந்த முறை அனைத்து ஆசிரியர்களின் வாக்காளர் விவரங்களை முன் கூட்டியே பெறுவது, எங்களின் ஓட்டுகளை மறைமுகமாக பதிவு செய்வதற்காவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும், பல ஆசிரியர்கள் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் தொடர்பாக விண்ணப்பித்துள்ள நிலையில், தற்போதே வாக்காளர் விவரங்களை பெறுவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pallikudamnews

சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க ஆசிரியர்கள், விஏஓ தலைமையில் குழு

கடந்த தேர்தல்களில் குறைந்த வாக்குகள் பதிவான பகுதிகளுக்கு ஆசிரியர்கள், விஏஓக்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஓட்டுப்பதிவை அதிகரிக்க விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும் எனதமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிப்பது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்துக்குப் பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. கடந்த 2 தேர்தல்களில் குறைவான வாக்குகள் பதிவான இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு குழு அமைக்கப்படும். அந்த குழுவில், வாக்குச்சாவடி அலுவலர், ஆசிரியர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த விஏஓ ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள். இவர்கள் வீடு, வீடாக சென்று வாக்களிப்பதன் அவசியத்தை மக்களிடம் விளக்கி வரும் தேர்தலில் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு பிரசாரம் செய்வார்கள். தற்போது, கல்லூரிகளில் மட்டுமே வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அடுத்தகட்டமாக, அனைத்து ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் முகாம் நடத்தப்படும். மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணிகளிடமும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். இதுதவிர திருவிழா நடைபெறும் பகுதிகள், அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம், விஏஓ அலுவலகம், தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில் வாக்களிப்பதன் அவசியம் தொடர்பான வாசகத்துடன் கூடிய பேனர்கள் வைக்கப்படும். பொதுமக்கள் அதிகம் கூடும் மால்களிலும் விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்படும். தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் தெரு, தெருவாக விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களில் கர்ப்பிணிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். இதுவரை ஆன்லைன் மூலம் அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்தக்கோரி 466 பேரும், வாகன பிரசாரம் நடத்த கோரி 154 பேரும், ஊர்வலம் நடத்தக் கோரி 74 பேரும், தேர்தல் அலுவலகம் திறக்க கோரி 14 பேரும் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 24 மணி நேரத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் எவ்வளவு பேர் தேவைப்படும் என்பது குறித்து முடிவு செய்ய டெல்லியில் நாளை ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் நான் கலந்து கொள்கிறேன். கூட்டத்துக்கு பின் இறுதி முடிவு எடுக்கப்படும். கடந்த சட்டமன்ற தேர்தலில்  240 கம்பெனிகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் தேர்தல் பாதுகாப்பில் ஈடுபட்டனர். ஒவ்வொரு கம்பெனியிலும் 70 முதல் 100 வீரர்கள் வரை இருப்பார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் 140 கம்பெனியை சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

வீடியோ கான்பரன்சிங்

15ம் தேதி சென்னை வந்து அனைத்து  மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் தேர்தல் குறித்து ஆலோசனை  நடத்த உள்ளேன். தொடர்ந்து 16ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மாவட்டங்கள்  வாரியாக தேர்தலுக்கு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து  ஆய்வு செய்ய உள்ளேன் என்று ராஜேஷ் லக்கானி கூறினார்

Monday, March 7, 2016

pallikudamnews

'மேப்' மாட்டாதஆசிரியர்கள் மீது நடவடிக்கை

         அரசு மற்றும் உதவிபெறும் தொடக்கப் பள்ளி மாணவர்கள், தங்களின் நாடு, மாநிலம், வசிக்கும் பகுதியை புவியியல்ரீதியாக அறிந்து கொள்ள, ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டுமென, உத்தரவிடப்பட்டிருந்தது.இதன் தொடர்ச்சியாக, வகுப்பறை சுவர்களில் வரைபடங்களை மாட்டஅதிகாரிகள் முடிவு செய்தனர்.மூன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, புவியியல் வரைபடங்கள், அரசின் சார்பில் இலவசமாக வினியோகம் செய்யப்பட்டுள்ளன.இந்த படங்களை, வகுப்பறைகளில் மாட்டி வைக்க, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார். வரைபடத்துடன் கற்றுத் தராத ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்

pallikudamnews

யாருக்கு பி.எப்., வரி விலக்கு

     புதுடில்லி;பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெறும் போது, வரி விலக்கு பெறக்கூடிய தொழிலாளர் பிரிவுகள் குறித்து, மத்திய அரசு விரைவில் அறிவிப்பாணை வெளியிட உள்ளது.

        மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பார்லி.,யில் தாக்கல் செய்த, 2016 - 17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், தொழிலாளர்கள், பணி ஓய்வுபெறும் போது, திரும்பப்பெறும், பி.எப்., தொகை மீது வரி விதிக்கப்படும் எனக் கூறியிருந்தார். அதற்கு, தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, பி.எப்., தொகையில், 60 சதவீதத்துக்கு கிடைக்கும் வட்டி மீது மட்டுமே வரி விதிக்கப்படும் என, அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.அரசு மூத்த அதிகாரி ஒருவர், கூறியதாவது:பி.எப்., தொகையை திரும்பப் பெறும் போது, வரி விலக்கு பெறக்கூடிய தொழிலாளர் பிரிவுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பாணையை, மத்திய அரசு விரைவில் வெளியிடும். மாதம், 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள், வரிவிலக்கு பெறுவர்.இவ்வாறு அரசு அதிகாரி கூறினார்.

pallikudamnews

பி.எப்.,வட்டிக்கு வரி விதிப்பதை நிறுத்தி வைக்க பிரதமர் பரிந்துரை

வருங்கால வைப்பு நிதிக்கு வரி விதிப்பதை நிறுத்தி வைக்குமாறு, நிதியமைச்சகத்துக்கு, பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
       இதனையடுத்து இது தொடர்பான அறிவிப்பை நிதியமைச்சர் அருண் ஜெட்லி விரைவில் பார்லிமென்டில் வெ ளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
        பார்லிமென்டில், பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். 'தொழிலாளர்கள் ஓய்வு அடையும்போது பெறும், இ.பி.எப்., மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி.பி.எப்., தொகையில், 60 சதவீதத்தின் மீது ஓய்வுக்கால வரி விதிக்கப்படும்' என, பட்ஜெட்டில் கூறப்பட்டது.
 
          இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து, இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இ.பி.எப்., தொகைக்கான வட்டிக்கு மட்டுமே வரி விதிக்கப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.
 
    இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து இது தொடர்பான இறுதி முடிவை பிரதமர் எடுக்க வேண்டும் என எம்.பி.,க்கள் கூட்டத்தில் ஜெட்லி கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகின.
          இந்நிலையில், பி.எப்., வட்டிக்கு வரி விதிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், இது தொடர்பாக விரிவாக ஆய்வு நடத்த வேண்டும் எனவும், நிதியமைச்சகத்துக்கு பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளார். இதனையடுத்து, பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று, தனது அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின்னர், இது தொடர்பான அறிவிப்பை ஜெட்லி பார்லிமென்டில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் தலையிட்டின் மூலம், 60 லட்சம் ஊழியர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது.

Sunday, March 6, 2016

Pallikudamnews

சிறப்பு தினங்கள்

சிறப்பு தினங்கள்
குடியரசு தினம் - ஜனவரி 26
உலக காசநோய் தினம் - பிப்ரவரி 25
தேசிய அறிவியல் தினம் - பிப்ரவரி 28
உலக மகளிர் தினம் - மார்ச் 8
நுகர்வோர் உரிமை தினம் - மார்ச் 15
உலக பூமி நாள் - மார்ச் 20
உலக வன நாள் - மார்ச் 21
உலக நீர் நாள் - மார்ச் 22
தேசிய கப்பற்படை தினம் - ஏப்ரல் 5
உலக சுகாதார நாள் - ஏப்ரல் 7
பூமி தினம் - ஏப்ரல் 22
உலக புத்தகநாள் - ஏப்ரல் 23
தொழிலாளர் தினம் - மே 1
உலக செஞ்சிலுவை தினம் - மே 8
சர்வ தேச குடும்பதினம் - மே 15
உலக தொலைத்தொடர்பு தினம் - மே 17
தேசிய வன்முறை ஒழிப்புதினம் - மே 21
(ராஜிவ் காந்தி நினைவு நாள்)
காமன்வெல்த் தினம் - மே 24
உலக போதை மருந்து எதிர்ப்பு நாள் - ஜூன் 26
உலக மக்கள் தொகை நாள் - ஜூலை 11
கல்வி நாள் (காமராஜர் பிறந்த நாள்) - ஜூலை 15
ஹுரோஷிமா தினம் - ஆகஸ்ட் 6
நாகசாகி தினம் - ஆகஸ்ட் 9
சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15
தேசிய விளையாட்டு தினம் - ஆகஸ்ட் 29
ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5
உலக எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 8
சர்வதேச அமைதி தினம் - செப்டம்பர் 16
உலக சுற்றுலா நாள் - செப்டம்பர் 27
உலக விலங்கு தினம் - அக்டோபர் 4
விமானப்படை தினம் - அக்டோபர் 8
உலக தர தினம் - அக்டோபர் 14
உலக உணவு தினம் - அக்டோபர் 16
ஐ.நா.தினம் - அக்டோபர் 24
குழந்தைகள் தினம்  - நவம்பர் 14
உலக எய்ட்ஸ் நாள் - டிசம்பர் 1
உடல் ஊனமுற்றோர் தினம்-  டிசம்பர் 3
இந்திய கப்பற்படை நாள் - டிசம்பர் 4
கொடிநாள் - டிசம்பர் 7
சர்வ தேச விமானப்போக்குவரத்து தினம் - டிசம்பர் 9
மனித உரிமை தினம் - டிசம்பர் 10
விவசாயிகள் தினம் - டிசம்பர் 23